தேடுதல்

புனித அகுஸ்தினார் மறைப்பணி சகோதரிகளுடன் திருத்தந்தை புனித அகுஸ்தினார் மறைப்பணி சகோதரிகளுடன் திருத்தந்தை  (ANSA)

சேவையே சிறந்த சாட்சியம்

புனித அகுஸ்தினார் விட்டுச் சென்ற மாண்பு, அமைதி மற்றும் வேற்றுமைகளை மதித்தல் போன்ற விழுமியங்களே இன்றைய உலகிற்குத் தேவையான அமைதிப் பாதையை வகுக்கும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அல்ஜியர்ஸ் மசூதிக்குச் சென்ற பிறகு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாப் எல் ஓய்ட் (Bab El Oued) பகுதியில் உள்ள புனித அகுஸ்தினார் மறைப்பணி சகோதரிகளால் நடத்தப்படும் 'வரவேற்பு மற்றும் நட்பு மையத்திற்கு' தனிப்பட்ட முறையில் ஒரு வருகையை மேற்கொண்டார். அங்கு அவர் 1990-களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது உயிர்நீத்த சகோதரிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்ததோடு, அந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் அன்பின் பணிகளையும் அங்கிருந்த சகோதரிகளின் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும் திருத்தந்தை அங்கிருந்த சமூகத்தினருடன் இணைந்து செபித்ததோடு, 1994-ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட எஸ்தர் பானியாகுவா அலோன்சோ (Esther Paniagua Alonso) மற்றும் கரிடாட் அல்வாரெஸ் மார்ட்டின் (Caridad Álvarez Martín) ஆகிய இரு சகோதரிகளின் நினைவைப் போற்றி அவர்களுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தினார். அன்பிற்காகவும் விசுவாசத்திற்காகவும் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்தச் சகோதரிகளின் அர்ப்பணிப்பு, இன்றும் திருஅவைக்கு ஒரு பெரும் ஊக்கமாகத் திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டினார்.

அல்ஜீரியாவின் 19 மறைசாட்சிகளில் ஒரு பகுதியாக விளங்கும் இந்தச் சகோதரிகளின் சாட்சிய வாழ்வைத் பாராட்டிய திருத்தந்தை, புனித அகுஸ்தினார் விட்டுச் சென்ற மாண்பு, அமைதி மற்றும் வேற்றுமைகளை மதித்தல் போன்ற உயரிய மரபுகளை சுட்டிக்காட்டியதுடன் இத்தகைய விழுமியங்களே இன்றைய உலகிற்குத் தேவையான அமைதிப் பாதையை வகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஏப்ரல் 2026, 15:01