திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 08 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஆவணத்தில் புனித வாழ்விற்கான பொதுவான அழைப்பு (universal call to holiness) குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
முதலில் திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
திருஅவையைப் பற்றிய மக்களினங்களின் ஒளி (Lumen gentium - LG) என்னும் பொதுச்சங்க ஆவணத்தின் ஐந்தாவது அதிகாரம் முழுவதுமே, நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் விடுக்கப்படும் புனித வாழ்விற்கான பொதுவான அழைப்பைப் பற்றிப் பேசுகிறது. இறை அருளில் வாழ்வதற்கும், நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்கும், கிறிஸ்துவுக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். பொதுச்சங்க ஆவணத்தின்படி, புனிதநிலை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட சலுகை அல்ல; மாறாக, அது திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் அன்பின் நிறைவை (perfection of charity) அடைந்திடத் தூண்டும் ஒரு கொடையாகும். அதாவது, கடவுள் மீதும் பிறர் மீதும் காட்டும் அன்பில் முழுமை பெறுவதற்குக் கடமைப்பட்டிருப்பதே புனிதமாகும்.
உண்மையில், நம்பிக்கையாளர்கள் அனைவரும் புனித வாழ்வு வாழ அழைக்கப்படுகிறார்கள்; அந்தப் புனித வாழ்வின் மிக முக்கியமான அடிப்படையே அன்புதான். தந்தை கடவுள் தன் மகன் இயேசு வழியாக நமக்கு கொடுத்த இந்த அன்புதான், நாம் புனிதமாவதற்கான எல்லா வழிகளையும் வழிநடத்துகிறது; அவற்றுக்கு ஒரு வடிவம் கொடுத்து, நம்மை இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது (LG, 42).
திருஅவையின் தொடக்க காலத்தைப் போலவே, புனித வாழ்வின் உன்னத நிலை என்பது மறைசாட்சி வாழ்வே ஆகும். இது "நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பகிரப்படும் மேலான சான்று " (LG, 50) என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த காலங்களைப் போலவே இன்றும், ஒவ்வொரு நம்பிக்கையாளரும் கிறிஸ்துவை அறிக்கையிடுவதற்காகத் தனது இரத்தத்தைச் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும் என்று பொதுச்சங்க ஆவணம் கற்பிக்கிறது (காண்க. LG, 42).
இந்த சான்று பகிரும் மனப்பான்மையானது, கிறிஸ்தவர்கள் சமூகத்தில் நீதிக்காக தங்களை அர்ப்பணிப்பதன் மூலமும், நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளங்களை விட்டுச் செல்வதன் மூலமும் எதார்த்தமாகிறது. அனைத்து அருளடையாளங்களும் அதிலும் குறிப்பாக நற்கருணை புனிதமான வாழ்வை வளர்த்தெடுக்கும் ஊட்டச்சத்தாக விளங்குகின்றன. இவை புனிதத்தின் மாதிரியாகவும் அளவுகோலாகவும் விளங்கும் கிறிஸ்துவுக்கு ஏற்ப, ஒவ்வொருவரையும் உருமாற்றுகின்றன. தலைவராகவும் ஆயராகவும் விளங்கும் கிறிஸ்து, தமது திருஅவையைப் புனிதப்படுத்துகிறார். இந்த வகையில், புனிதநிலை என்பது அவர் அளிக்கும் ஒரு கொடையாகும். நாம் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொண்டு, அர்ப்பணிப்புடன் அவருக்குப் பதிலளிக்கும் போதெல்லாம், நமது அன்றாட வாழ்வில் இந்தப் புனிதநிலை வெளிப்படுகிறது.
இது தொடர்பாக, அக்டோபர் 20, 1965 அன்று நடைபெற்ற பொது மறைக்கல்வி உரையின் போது புனித ஆறாம் பவுல் அடிகள் நினைவு கூர்ந்ததாவது: திருஅவை உண்மையானதாக இருக்க வேண்டுமானால், திருமுழுக்கு பெற்ற அனைவரும் "புனிதர்களாக இருக்க வேண்டும், அதாவது உண்மையில் தகுதியுள்ள, வலிமையான மற்றும் நம்பிக்கையுள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டும்." இது ஒரு உட்புற மாற்றமாக (interior transformation) நிறைவேறுகிறது; இதன் வழியாக, தூய ஆவியின் வல்லமையால் ஒவ்வொருவருடைய வாழ்வும் கிறிஸ்துவுக்கு ஏற்றதாக மாற்றப்படுகிறது (காண்க. உரோ 8:29; LG, 40).
கத்தோலிக்கத் திருஅவையின் புனிதத்தன்மை என்பது நம்பிக்கையால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அதன் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என மக்களினங்களின் ஒளி என்ற ஆவணம் விவரிக்கிறது. ஏனெனில் திருஅவை "குறைபடாத புனிதத்தன்மை" (indefectibly holy) கொண்டது என நம்பப்படுகிறது (LG, 39). இதன் பொருள், திருஅவை ஏற்கனவே முழுமையான மற்றும் நிறைவான புனிதத்தைப் பெற்றுவிட்டது என்பதல்ல; மாறாக, நிலையான இலக்கை நோக்கிய தனது பயணத்தில், "உலகத்தின் துன்புறுத்தல்களுக்கும் கடவுளின் ஆறுதல்களுக்கும் இடையே (புனித அகுஸ்தினார், De civ. Dei 51,2; LG, 8) பயணிக்கும்போது, இந்த இறைக்கொடையை உறுதிப்படுத்த திரு அவை அழைக்கப்படுகிறது என்பதாகும்.
திருஅவையில் அதாவது நம் அனைவரிடமும் பாவம் குடி கொண்டிருக்கும் துயரமான யதார்த்தம், நாம் ஒவ்வொருவரும் தீவிரமான வாழ்க்கை மாற்றத்தை மேற்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறது. அன்பின் வழியே நம்மைப் புதுப்பிக்கும் இறைவனிடம் நம்மை நாம் ஒப்படைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.
திருஅவையைப் புனிதப்படுத்தும் இந்த எல்லையற்ற இறையருளே, நாம் ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை நம்மிடம் ஒப்படைக்கிறது. அதுவே நமது மனமாற்றம் ஆகும். எனவே, புனிதநிலை என்பது வெறும் நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல; அதாவது, அது ஒரு சிறந்த அறநெறி சார்ந்த அர்ப்பணிப்பு (ethical commitment) என்ற அளவில் மட்டும் சுருக்கிவிடக்கூடியது அல்ல. மாறாக, அது தனிப்பட்ட முறையிலும் சமூக அளவிலும் கிறிஸ்தவ வாழ்வின் மிக அடிப்படையான சாராம்சம் (essence) குறித்ததாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு (consecrated life) ஒரு தீர்க்கமான பங்கினை வகிக்கிறது; இது பொதுச்சங்க ஆவணத்தின் ஆறாவது அதிகாரத்தில் (காண்க. எண்கள் 43–47) விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் புனித மக்களிடையே, இது வரலாற்றின் இக்காலகட்டத்திலேயே அனுபவிக்கப்படும் ஒரு புதிய உலகிற்கான தீர்க்கதரிசன அடையாளமாகத் திகழ்கிறது. உண்மையில், திருஅவையின் மறைபொருளில் ஏற்கனவே பிரசன்னமாகியிருக்கும் இறையரசின் அடையாளங்கள் யாவை எனில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் செதுக்கும் நற்செய்தி அறிவுரைகளான எழ்மை, கற்பு மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவையே ஆகும்.
இந்த மூன்று நற்பண்புகளும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அல்ல; மாறாக, இவை தூய ஆவியார் அளிக்கும் விடுதலையளிக்கும் கொடைகளாகும். இவற்றின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் சிலர் தங்களை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். எழ்மை என்பது இறைப்பராமரிப்பின் மீது கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது; இது ஒருவரைத் இலாப நஷ்ட கணக்கு பார்ப்பதிலுருந்தும் மற்றும் சுயநலத்திலிருந்தும் விடுவிக்கிறது. கீழ்ப்படிதல் என்பது கிறிஸ்து தந்தையாம் இறைவனுக்குத் தம்மையே கையளித்த அர்ப்பணிப்பை முன்மாதிரியாகக் கொள்கிறது; இது ஒருவரைச் சந்தேகம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையிலிருந்து விடுவிக்கிறது. கற்பு என்பது கடவுளுக்கும் திருஅவைக்கும் செய்யும் பணியில், அன்பினால் முழுமையும் தூய்மையும் அடைந்த இதயத்தை இறைவனுக்குக் காணிக்கையாக்குவதாகும்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
