கிறிஸ்தவ வாழ்விற்கு ஜெபம், பிறரன்புப் பணி மற்றும் ஒருமைப்பாடு அவசியம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 13, திங்களன்று, ஆப்பிரிக்க அன்னை பேராலயத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அல்ஜீரிய சமூகத்துடனான சந்திப்பின்போது ஆற்றிய உரை.
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
காலை வணக்கம்
பண்டைய மரபுகளாலும், நம்பிக்கையின் ஒளிமிகுந்த சாட்சிகளாலும் அடையாளப்படுத்தப்படும் இந்த மண்ணில், உங்களைச் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் சமூகம் ஆழமான வேர்களைக் கொண்டது. இறைவன் மீதும் சக மனிதர்கள் மீதும் கொண்ட அன்பினால் தங்கள் உயிரையே அர்ப்பணித்த பலரின் வழித்தோன்றல்கள் நீங்கள். அவர்களில் அல்ஜீரியாவில் மறைசாட்சிகளாக மரித்த பத்தொன்பது துறவிகளும் அடங்குவர்; மக்கள் அனுபவித்த இன்ப துன்பங்களில் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என அவர்கள் உறுதியுடன் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் தியாகம் இன்றும் நற்பலன்களைத் தந்து கொண்டிருக்கிறது. மாபெரும் சாட்சிகள் தங்கள் நம்பிக்கையைப் பறைசாற்றிய தொடக்க நூற்றாண்டுகளைச் சார்ந்த, மிகத் தொன்மையான கிறிஸ்தவப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல்களாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். அவர்களின் நினைவு, இன்றும் நீங்கள் ஒருமைப்பாடு, உரையாடல் மற்றும் அமைதிக்கான அடையாளங்களாகத் திகழ விடுக்கப்படும் ஓர் அழைப்பாக அமைகிறது.
கிறிஸ்தவ வாழ்வின் மூன்று முக்கியமான அம்சங்களைப்பற்றி, குறிப்பாக இங்கு நீங்கள் இருப்பதன் பின்னணியில் உங்களோடு இணைந்து சிந்திக்க விரும்புகிறேன்: அவை ஜெபம், பிறரன்புப்பணி மற்றும் ஒற்றுமை.
முதலாவதாக, ஜெபம். நம் அனைவருக்கும் ஜெபம் தேவை. சுவாசிப்பது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே ஜெபமும் திருஅவையின் வாழ்விற்கும், நம் ஒவ்வொருவருக்கும் மிக இன்றியமையாதது. ஜெபம் என்பது இறைவனுடனான ஒரு உரையாடல்; அது மனித இதயத்தை வலுப்படுத்துகிறது, தூய்மைப்படுத்துகிறது மற்றும் ஒன்றிணைக்கிறது." ஜெபத்தின் வழியாக, நாம் கடவுளுக்கும் பிறருக்கும் நம்மையே திறந்து அர்ப்பணிக்கிறோம். நாம் கேட்டறிந்தபடி, அமைதியையும், சமாதானத்தையும், தங்களுக்குச் செவிசாய்க்கக் கூடிய ஒருவரையும் தேடிப் பல மக்கள் திருத்தலங்களுக்கு வருகின்றனர். ஜெபத்தில், சுமைகள் பகிரப்படுகின்றன, இதயங்கள் ஆறுதல் பெறுகின்றன, மற்றும் ஒற்றுமை வளர்க்கப்படுகிறது. இதன் மூலம், திருஅவை மனிதத்தன்மையையும், மனவலிமையையும், புனிதத்தையும் விதைத்து வருகிறது; பல நேரங்களில் இவை வெளிப்படையாகத் தெரியாமல், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசிய வழிகளில் நடைபெறுகின்றன.
இரண்டாவதாக, பிறரன்புப் பணி. பிறரன்பு என்பது வெறும் புறம் சார்ந்த உதவிகளைச் செய்வதோடு முடிந்துவிடுவதில்லை; அது அச்செயலில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் ஆன்மீக ரீதியாக மேன்மைப்படுத்தும் ஓர் இறை அருளின் வாய்ப்பாகும். நோயுற்றோரை நலம் விசாரிப்பது போன்ற எளிய அன்பானச் செயல்கள், நாளடைவில் ஒருவரையொருவர் அரவணைக்கும் சமூகங்களாக மாறுவதற்கு துணை புரிகின்றன. அங்கு மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தகைய சூழல்கள் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் வழங்கும் இடங்களாக அமைகின்றன; அங்கு துன்பப்படுபவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதுடன், மற்றவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மலரவும் காரணமாகிறார்கள்.
நாம் நினைவு கூரும் அந்த மறைசாட்சிகள், இத்தகைய பிறரன்பைத் தங்களின் முழுமையான வாழ்வாக்கிக் காட்டினார்கள். வன்முறைக்கும் வெறுப்புக்கும் மத்தியிலும், அவர்கள் அன்பு செலுத்துவதில் உறுதியாய் இருந்தனர்; அந்த அன்பிற்காகத் தங்கள் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாய் விளங்கினர். அவர்கள் எவ்விதப் பாராட்டையும் எதிர்பார்க்காமல், அடக்கம், அமைதி மற்றும் இறைவனிடம் கொண்ட முழுமையான நம்பிக்கையோடு செயல்பட்டார்கள். அவர்களுடைய சாட்சிய வாழ்வு இன்றும் நம்பிக்கையைத் தூண்டுவதாக அமைவதுடன், சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டில் வேரூன்றிய ஓர் உலகத்தைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.
இறுதியாக, ஒருமைப்பாடும் அமைதியும், அமைதிக்கான இந்த அழைப்பு கிறிஸ்தவச் செய்தியின் மையப்பகுதியாகும். ஆரம்ப காலத்திலிருந்தே, கிறிஸ்தவ சமூகங்கள் நல்லிணக்கத்திற்கும் பகிர்ந்தளிக்கும் வாழ்விற்கும் அடையாளமாகத் திகழ்ந்தன; இது தன் சீடர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கிறிஸ்துவின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. ஒற்றுமை என்பது பன்முகத்தன்மையை அழிப்பதல்ல, மாறாக அது அன்பு மற்றும் சுமூகமான மரியாதையின் மூலம் மக்களை ஒன்றிணைப்பதாகும்.
இன்று, இந்த உணர்வு உங்கள் சமூகத்தில் பிரதிபலிப்பதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வழிபாட்டுத் தலங்களும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களும் அமைதி மற்றும் ஒற்றுமையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன; அங்கு பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள், அனைவரையும் அரவணைக்கும் ஓர் அன்பான பிரசன்னத்தின் பராமரிப்பில் ஒன்றாக இணைகின்றனர். நம்பிக்கை நம்மைத் தனிமைப்படுத்துவதில்லை, மாறாக மற்றவர்களுக்கு நம்மைத் திறந்து காட்டுகிறது; அது நமது வேறுபாடுகளை அழிக்காமல் நம்மை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கி, உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
