112-ஆவது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான மையக்கருத்து: இச்சிறுவர்களில் ஒருவர்கூட
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மத்தேயு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள, 'இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் (மத் 18:5) என்ற இறைவார்த்தையை மையமாகக் கொண்டு, ' இச்சிறுவர்களில் ஒருவர்கூட என்ற மையக்கருத்தை 2026-ஆம் ஆண்டிற்கான 112-ஆவது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பாக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அறிவித்துள்ளார் என்று வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தலைப்பின் வாயிலாக, புலம்பெயர்தலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மீது திருஅவை கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்திய திருத்தந்தை, நற்செய்தி நமக்குக் கற்பிப்பது போல, அவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்க வேண்டிய கடமையை எடுத்துக்காட்டியுள்ளார் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இப்பிரச்சினை குறித்து திருத்தந்தையர்கள் அதிகாரப்பூர்வமாகப் பேசுவது இது முதல் முறையல்ல; இருப்பினும், தற்போதைய புலம்பெயர்வுச் சூழல் நம்மிடையே உள்ள இளையவர்களின் உரிமைகளுக்கும் மாண்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் புதிய சவால்களை முன்வைக்கிறது என்றும், இவை அவசரமான மற்றும் பயனுள்ள தீர்வுகளைக் கோருகின்றன என்றும் அவ்வறிக்கை எடுத்துகாட்டியுள்ளது.
எனவே, இது எண்ணிக்கைகள் அல்லது விழுக்காடுகளைப்பற்றி விவாதிப்பதற்கான விடயம் அல்ல; ஏனெனில், ஒரே ஒரு குழந்தையாக இருந்தாலும்' அதுவே மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
