தேடுதல்

பிரான்ஸ் நாட்டு அரசு தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் (கோப்பு படம் ) பிரான்ஸ் நாட்டு அரசு தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் (கோப்பு படம் )  (ANSA)

திருத்தந்தையுடன் பிரான்ஸ் அரசு தலைவர் சந்திப்பு

திருத்தந்தை மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசு தலைவர் மாக்ரோனுடனான இந்தச் சந்திப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல், ஜெருசலேமில் வழிபடுவதற்கான சுதந்திரம் மற்றும் லெபனோனின் எதிர்காலம் ஆகியவை முக்கிய கருப்பொருளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 10, வெள்ளியன்று பிரான்ஸ் நாட்டு அரசு தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13, திங்கள் கிழமை அல்ஜீரியாவில் தொடங்கி ஏப்ரல் 23, வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ள  ஆப்பிரிக்காவிற்கான திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணத்திற்கு முன்னதாக இடம்பெறவிருக்கும் இந்த சந்திப்பின்போது அரசு தலைவர் மாக்ரோன் மற்றும் அவரது மனைவி பங்கேற்கும் தனிப்பட்ட சந்திப்பும் இடம்பெறவுள்ளது என்று அச்செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

தற்போது பிரான்ஸ் நாட்டின் அரசு தலைவர்  மாக்ரோனுடனான இந்தச் சந்திப்பு பாரம்பரிய வத்திக்கானின் நெறிமுறைகளைப் பின்பற்றி அமையும் என்றும், இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து திருப்பீடத்தின் மூத்த தூதரக அதிகாரிகளுடனான சந்திப்புகளும் இடம்பெறும் என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல், ஜெருசலேமில் வழிபடுவதற்கான சுதந்திரம் மற்றும் லெபனோனின் எதிர்காலம் ஆகியவை முக்கிய கருப்பொருளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி, அனைத்துலகச்  சட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் திருப்பீடமும், பிரான்சும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும்,  கருக்கலைப்பு மற்றும் மரண தருவாயில் உள்ளவர்களுக்கான சட்டங்கள் போன்ற அறநெறி சார்ந்த விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2026, 14:39