தேடுதல்

அல்ஜீரியாவின் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது திருத்தந்தை அல்ஜீரியாவின் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது திருத்தந்தை  

மாண்பு, நீதி, அமைதி: அல்ஜீரியாவிற்கான ஓர் அன்பு அழைப்பு

நாம் அனைவரும் ஒரே விண்ணகத் தந்தையின் பிள்ளைகள், சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ளோம். உங்களின் ஆழ்ந்த ஆன்மீக உணர்வு சந்திப்பு, ஒப்புரவு மற்றும் சுமூகமான புரிதல் ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்க்கிறது. இதுவே இன்று நமது உலகிற்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 13, திங்களன்று, அல்ஜீரியாவின் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, தூதரக அதிகாரிகளே, சகோதர,சகோதரிகளே

எனது திருத்தந்தைப் பணியின் ஆரம்பத்திலேயே அல்ஜீரியா நாட்டுக்கு வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஒரு பெரும் பேறாகக் கருதி நன்றி கூறுகிறேன். நீங்கள் எனக்கு அளித்த இந்த அன்பான வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது .புனித அகுஸ்தினாரின் ஆன்மீகப் புதல்வன் என்ற முறையில், நான் ஏற்கனவே இந்த மண்ணிற்கு வருகை தந்துள்ளேன்; இப்போது புனித பேதுருவின் வாரிசாகவும், உன்னதமான அல்ஜீரிய மக்களைச் சந்திக்க ஆவலுடன் வந்திருக்கும் ஓர் அமைதிப் பயணியாகவும் மீண்டும் இங்கே திரும்பியுள்ளேன்.

நாம் அனைவரும் ஒரே விண்ணகத் தந்தையின் பிள்ளைகள், சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ளோம். உங்களின் ஆழ்ந்த ஆன்மீக உணர்வு சந்திப்பு, ஒப்புரவு மற்றும் சுமூகமான  புரிதல் ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்க்கிறது. இதுவே இன்று நமது உலகிற்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

உங்கள் மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அமைதி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு சாட்சியாக நான் இங்கே வந்துள்ளேன். வரலாற்றுச் சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், ஒன்றிப்பு, விருந்தோம்பல் மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் அல்ஜீரியா வலிமையுடன் திகழ்கிறது.

ஒன்றிப்பு அல்லது இரக்கம் இல்லாத ஒரு சமூகம் இறைவனின் திருவுளத்திற்கு முரணானது. உங்கள் நாட்டின் அனுபவங்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன. உரையாடலை ஊக்குவிப்பதன் மூலமும், மனித மாண்பை மதிப்பதன் மூலமும், பிறருடன் ஒன்றிப்பை வெளிப்படுத்துவதன் மூலமும், அல்ஜீரியா உலகில் மேலான நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட பங்களிக்க முடியும்.

அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், அனைத்துலக சட்டமீறல்கள் மற்றும் நவகாலனித்துவப் போக்குகளுக்கு இடையே இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையான வலிமை என்பது பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலேயே உள்ளது; அங்குத் தலைமைத்துவம் என்பது ஆதிக்கம் செலுத்துவதாக இல்லாமல், சேவை செய்வதாக இருக்க வேண்டும். அரசியல் வாழ்வு, நீதியால் வழிநடத்தப்பட வேண்டும், அது அனைவருக்கும் மாண்பையும் யும் நியாயமான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

மத்திய தரைக்கடல் (Mediterranean) மற்றும் சஹாரா (Sahara) பாலைவனம் ஆகியவை வெறும் புவியியல் எல்லைகள் மட்டுமல்ல; அவை வரலாறும் மனிதப் பரிமாற்றங்களும் செறிந்த ஆன்மீகச் சந்திப்புப் புள்ளிகளாகவும் திகழ்கின்றன.

அவை ஒருபோதும் மரணத்திற்கும் விரக்திக்கும் உரிய இடங்களாக மாறிவிடக்கூடாது; மாறாக, வாழ்வு, சந்திப்பு மற்றும் நம்பிக்கையின் களங்களாகவே நிலைத்திருக்க வேண்டும். நாம் அனைத்து வகையான சுரண்டல்களையும் எதிர்க்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு மனித உயிரின் மாண்பையும்  நிலைநாட்ட வேண்டும்.

இன்றைய உலகில், அடிப்படைவாதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றங்கள், கடவுள் மற்றும் மனித மாண்பு பற்றிய நமது புரிதலுக்குச் சவாலாக அமைகின்றன. இருப்பினும், இச்சவால்கள் புதுப்பித்தலுக்கான புதிய வழிகளையும் திறந்துவிடுகின்றன. உரையாடல், கல்வி மற்றும் பரஸ்பர சுமூகமான மரியாதை ஆகியவற்றின் மூலம், நாம் ஒப்புரவையும் ஒரு பொதுவான எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

அல்ஜீரியாவைப் பொறுத்தமட்டில் எனது விருப்பமும் செபமும் இதுவே: இது அமைதி, ஒற்றுமை மற்றும் அதன் மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்கும் ஒரு நிலமாகத் திகழட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஏப்ரல் 2026, 14:48