அன்பும் சேவையுமே இறைவனின் அடையாளம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 14, செவ்வாயன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அன்னபாவில் உள்ள புனித ஜீன் ஜுகான் (Saint Jeanne Jugan) என்பவரால் தொடங்கப்பட்ட, ஏழைகளின் சிறிய சகோதரிகளால் நடத்தப்படும் மா மேசன் (Ma Maison) முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியவர்களை சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய உரை.
அன்பான சகோதர சகோதரிகளே!
என்னை இந்த இல்லத்திற்கு வரவேற்றமைக்கு என் மனம் கனிந்த நன்றி! உங்கள் உள்ளங்களில் இயேசுவைத் தாங்கி பணியாற்றி வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். உண்மையில், அன்பும் சேவையும் எங்கே நிலவுகிறதோ, அங்கே இறைவன் வீற்றிருக்கிறார் என்பதை உணர்கின்றேன்.
இந்த இல்லத்தின் பணியாளர்களுடன் இணைந்து, 'ஏழைகளின் சிறிய சகோதரிகளுக்கு' (Little Sisters of the Poor) நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை பிலோமினா அவர்களே, உங்கள் வரவேற்பிற்கு நன்றி.
உங்கள் அனைவரின் சந்திப்பிற்கு பின்னரும், இங்குள்ள முதிய சகோதர சகோதரிகளின் நடுவே நீங்கள் வீற்றிருப்பதை நேரில் காணும்போதும், இறைவனைப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேருவகை கொண்டு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்' என்றார் (லூக்கா 10:21).
திரு. சலா புச்செமல் அவர்களின் சான்றிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; அது மிகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருந்தது. சகோதரத்துவத்தோடு மக்கள் ஒன்றிணைந்து வாழ முயற்சிக்கும் இது போன்றதொரு இல்லத்தை விண்ணகத்திலிருந்து நோக்கும் இறைவன், 'இங்கே இன்னும் நம்பிக்கை இருக்கிறது!' என்று கூறுவார் என நான் நினைக்கிறேன். ஆம், ஏனெனில் போர்கள், வன்முறைகள், அநீதிகள் மற்றும் பொய்களால் இறைவனின் இதயம் பிளவுபட்டுக் கிடக்கிறது.
ஆனால், தீய எண்ணம் கொண்டவர்களிடமோ, ஆணவம் பிடித்தவர்களிடமோ அல்லது தலைக்கனம் உள்ளவர்களிடமோ நம் தந்தையாகிய இறைவன் இருப்பதில்லை. இறைவனின் இதயம் எளியவர்களோடும் தாழ்மையுள்ளவர்களோடும் தான் இருக்கிறது; உங்களது அன்றாட சேவை, நட்பு மற்றும் கூட்டு வாழ்வின் வழியாக நீங்கள் இங்கே முயற்சி செய்து கொண்டிருப்பதைப் போலவே, அவரும் அவர்களோடு இணைந்து தனது அன்பு மற்றும் அமைதியின் அரசை நாள்தோறும் கட்டியெழுப்புகிறார்.
அன்புச் சகோதர சகோதரிகளே! இந்தச் சந்திப்பிற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி! உங்களை எப்போதும் என் ஜெபங்களில் நினைவில் கொள்வேன். எனது ஆசீரை உங்களுக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
