தேடுதல்

இத்தாலிய  ஒலிம்பிக் வீரர்களுடன் திருத்தந்தை இத்தாலிய ஒலிம்பிக் வீரர்களுடன் திருத்தந்தை  (@Vatican Media)

இத்தாலிய ஒலிம்பிக் வீரர்களை சந்திக்கும் திருத்தந்தை

விளையாட்டு ஒருவரது பண்பை உருவாக்குகிறது; முழுமையான மனிதனாக ஒருவரை வளர்த்தெடுத்து, சமநிலையைக் கற்றுக்கொடுக்கிறது; சகோதரத்துவத்தை இழக்காமல் போட்டியிடவும், மாண்புடன் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், ஆணவமின்றி வெற்றியைச் சுவைக்கவும் கற்பிக்கிறது : திருத்தந்தை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

விளையாட்டை அதன் உண்மைத்தன்மையுடன் அணுகும்போது, அது உழைப்பு, அர்ப்பணிப்பு, தோல்விகள் மற்றும் மீண்டும் எழுதல் ஆகியவற்றைப் பேசும் ஒரு மொழியாகத் திகழ்கிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 09, வியாழனன்று, மிலன் மற்றும் கார்டினா டி' அம்பெஸோ நகரங்களில் இடம்பெற்ற குளிர்காலப் போட்டிகளில் பங்கேற்ற இத்தாலிய ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை,  இந்தப் போட்டிகள் ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது மட்டுமல்லாமல், ஆழமான மனிதநேய, கலாச்சார மற்றும் ஆன்மீகச் செய்தியையும் பகிர்ந்துள்ளன என்று தெரிவித்தார்.

குறிப்பாக இந்தப் போட்டிகளில், மனித எல்லைகளுக்குள்ளும் புதிய பலங்களைக் கண்டறிய முடியும் என்பதையும், அது பலருக்கு உந்துதலாக அமையும் என்பதையும் நாம் கண்டோம் என்று திருத்தந்தை கூறினார்.

மேலும் உங்களது சாதனைகள் யாரும் தனித்து வெற்றி பெறுவதில்லை என்பதை நினைவூட்டுகின்றன என்றும், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் குடும்பங்கள், குழுக்கள் மற்றும் விடாமுயற்சி ஆகியவை உறுதுணையாக நிற்கின்றன என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து விளையாட்டு ஒருவரது பண்பை உருவாக்குகிறது என்றும், முழுமையான மனிதனாக ஒருவரை வளர்த்தெடுத்து, சமநிலையைக் கற்றுக்கொடுக்கிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, சகோதரத்துவத்தை இழக்காமல் போட்டியிடவும், மாண்புடன் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், ஆணவமின்றி வெற்றியைச் சுவைக்கவும் அது கற்பிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

பிளவுகளாலும் மோதல்களாலும் சூழப்பட்டுள்ள இவ்வுலகில், விளையாட்டு என்பது மனிதர்கள் ஒன்றிணையும் இடமாகவும் அமைதியின் களமாகவும் திகழ முடியும் என்று கூறிய திருத்தந்தை இது ஒலிம்பிக் போர்நிறுத்தத்தின் (Olympic truce) உன்னத நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

இறுதியாக தடைசெய்யப்பட்ட மருந்துகள், பண ஆசை மற்றும் வெறும் விளம்பர மோகம் போன்ற தூண்டுதல்களைத் தவிர்த்து, உண்மையான விளையாட்டுத் திறமையை வீரர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, மனித நேயத்திற்கே முதலிடம் கொடுக்க உங்களுக்கு இயேசு கிறிஸ்து வழிகாட்டுவாராக என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 14:38