அல்ஜீரியாவின் அன்பும் கத்தோலிக்க நம்பிக்கையும் : திருத்தந்தையின் நன்றிச் செய்தி
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அல்ஜீரியப் பயணத்தை முடித்துக்கொண்டு, கேமரூன் செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட உரை :
அல்ஜீரியாவிற்கான எனது பயணம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக அமைந்த பிறகு, இன்று காலை உங்களைச் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எமது விமானம் அந்நாட்டின் வான்பரப்பைக் கடக்கும்போது வழங்கப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அல்ஜீரிய அதிகாரிகளின் தாராள மனப்பான்மைக்கும் மரியாதையான வரவேற்பிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அங்கு வாழும் சிறிய அளவிலான, ஆனால் மிக முக்கியமான கத்தோலிக்க சமூகத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் அன்னாபாவில் (Annaba) அமைந்துள்ள ஆப்பிரிக்காவின் அன்னை மரியா பேராலயம் (Basilica of Our Lady of Africa) மற்றும் பழங்கால ஹிப்போ (Hippo) நகரை நோக்கியவாறு அமைந்துள்ள புனித அகுஸ்தினார் பேராலயம் ஆகியவற்றிற்குச் சென்றோம். புனித அகுஸ்தினார் இன்றும் ஒரு வலிமைமிக்க சாட்சியாகத் திகழ்ந்து, நம் அனைவரையும் கடவுளையும் உண்மையையும் தேடுமாறு அழைக்கிறார். அவருடைய பாரம்பரியம் கிறிஸ்தவர் அல்லாத பலராலும் போற்றப்படுகிறது.
இந்தக் கடந்த சில நாட்கள், உரையாடலையும் சுமூகமான மரியாதையையும் வலுப்படுத்தியுள்ளன. மசூதிக்கான எமது வருகை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாம் அனைவரும் அமைதியுடன் இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
