கேமரூனில் திருத்தந்தை: அமைதி மற்றும் நம்பிக்கையின் தூதுவர்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஏப்ரல் 15, புதனன்று கேமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டேயிற்கு வருகை தந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை வரவேற்ற கேமரூன் நாட்டு அதிபர் பால் பியா அவர்கள், இந்த வருகையை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் கேமரூனுக்கு கிடைத்த பெருமை என்றும் விவரித்துள்ளார்.
திருத்தந்தை ஆப்பிரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதைச் சுட்டிக்காட்டிய அதிபர் பியா அவர்கள் , உலகளாவிய நெருக்கடிகளும், மோதல்களும், பொருளாதாரச் சவால்களும் சூழ்ந்துள்ள இக்காலக்கட்டத்தில், திருத்தந்தையின் வருகை அமைதி, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம் ஆகிய செய்திகளைத் தாங்கி வரும் ஒரு தூதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
போர்களுக்குப் பதிலாக உரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்றும் இங்குள்ள வளங்கள் மனித நலனுக்காகப் பயன்படும் ஒரு நம்பிக்கையான உலகம் மனிதகுலத்திற்கு தற்போது அவசரமாகத் தேவை என்றும் அதிபர் பியா அவர்கள் வலியுறுத்தியுள்ளார் .
மேலும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் அமைதி, நீதி, பொறுமை, மன்னிப்பு மற்றும் அன்பை மேம்படுத்துவதில் திருத்தந்தை கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.
சமய சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான உடனிருப்பு ஆகியவற்றில் கேமரூனின் பாரம்பரியத்தையும், கத்தோலிக்க திருஅவையுடன் குறிப்பாக கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் கொண்டுள்ள வலுவான உறவையும் அதிபர் பியா அவர்கள் எடுத்துரைத்துள்ளார் .
திருத்தந்தையின் இந்த வருகை அந்த உறவுகளை வலுப்படுத்தும் என்றும், மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் என்றும் அதிபர் பியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
