தேடுதல்

திருத்தந்தை  திருத்தந்தை   (ANSA)

துன்பத்தின் நடுவே துளிர்க்கும் நம்பிக்கை

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பமெண்டா மக்களுக்கு ஆறுதல் கூற வந்த திருத்தந்தை, "அமைதிக்கான நேரம் வந்துவிட்டது, அது நாளை அல்ல, இப்போதே தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 16, வியாழனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாமெண்டோ உயர்மறைமாவட்டத்தின் புனித யோசேப்பு பேராலயத்தில் அமைதிக்கானக் கூட்டத்தில் பங்கேற்றபோது ஆற்றிய உரை. 

அன்புள்ள சகோதர, சகோதரிகளே,

பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் உங்களோடு இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் சான்று பகரும் வாழ்வின் மூலம் நீங்கள் நிரூபித்துள்ளது போல, உங்கள் சமூகம் அனுபவித்த துன்பங்கள், கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதிவில்லை என்ற உங்கள் நம்பிக்கையை இன்னும் உறுதியாக்கியுள்ளன! அவரில், அவரது அமைதியில், நாம் எப்போதும் புதியதொரு வாழ்வை தொடங்க முடியும்!

அமைதியை அறிவிக்கும் அழகான பாதங்கள்

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! (எசாயா 52:7) என்ற இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கினை பேராயர் குறிப்பிட்டார். மேற்கூறிய வார்த்தைகளால் அவர் என்னை வரவேற்றார், இப்போது நான் அதற்குப் பதிலளிக்க விரும்புகிறேன்: இரத்தம் படிந்திருந்தாலும் வளமானதாகவும், தவறாக நடத்தப்பட்டாலும் தாவரங்களும் கனிகளும் நிறைந்தாகவும் விளங்கும் இந்த நிலத்தின் தூசியால் படிந்த உங்கள் பாதங்களும் எவ்வளவு அழகானவை. உங்கள் பாதங்கள் உங்களை இதுவரை அழைத்து வந்துள்ளன, சிரமங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், அவை நன்மையின் பாதையில் நிலைத்திருக்கின்றன. உங்கள் வரவேற்பு வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால் அது உண்மை: நான் இங்கே அமைதியை அறிவிக்க வந்திருக்கிறேன். ஆனால் நீங்கள்தான் எனக்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் அமைதியை அறிவிக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன்.

உலகின் பல இடங்களிலும் இது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அமைதி ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றவர்கள்! ஆனால் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தையும் கடவுளின் பெயரையும் பயன்படுத்திக்கொண்டு, புனிதமானவற்றை இருளிலும் அழுக்கிலும் தள்ளுபவர்களுக்கு ஐயோ கேடு!

பமெண்டா, இன்று நீ குன்றின் மேல் உள்ள நகரம், அனைவரின் கண்களிலும் ஒளிர்கிறாய்! சகோதர சகோதரிகளே, இந்த நிலத்திற்குத் தொடர்ந்து சுவை கொடுக்கும் உப்பாக இருங்கள். வரும் ஆண்டுகளில் கூட உங்கள் சுவையை இழக்காதீர்கள்! இந்தத் துயரமான காலங்களில் உங்களை ஒன்று சேர்த்த அனைத்து பகிர்ந்துகொள்ளப்பட்ட தருணங்களையும் போற்றுங்கள். உங்கள் சகோதர சகோதரிகளின் காயங்களின் மேல் ஊற்றப்படும் எண்ணெயாக இருங்கள்.

துன்பத்தின் மத்தியில் ஒளிரும் நகரம்

இது தொடர்பாக, வன்முறையால் பாதிக்கப்பட்ட தனிநபர்களைப் பராமரிக்கும் அனைவருக்கும், குறிப்பாக சாதாரண மக்கள் மற்றும் துறவறப் பெண்கள் ஆகியோருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒவ்வொரு நாளும் கண்ணுக்குத் தெரியாமல் செய்யப்படும் ஒரு மகத்தான பணி, சகோதரி. கரின் நமக்கு நினைவூட்டியது போல், இது ஆபத்தானதும் கூட. அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதும், ஆனால் மீண்டும் கட்டியெழுப்ப ஒரு ஆயுட்காலம் போதாது என்பதைப் போரை உருவாக்கி நடத்துபவர்கள் அறியாதது போல் நடிக்கிறார்கள். கொலை மற்றும் அழிவுக்காக நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழிக்கப்படுகின்றன, ஆனால் குணப்படுத்துவதற்கும், கல்விக்கும், மறுசீரமைப்பிற்கும் தேவையான வளங்கள் எங்கும் காணப்படவில்லை என்ற உண்மையை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

உங்கள் நிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் பொதுவாக இலாபத்தின் பெரும்பகுதியை ஆயுதங்களில் முதலீடு செய்கிறார்கள், இதனால் நிலையற்ற தன்மை மற்றும் மரணத்தின் முடிவற்ற சுழற்சியைத் தொடர்கிறார்கள். இது தலைகீழாக மாற்றப்பட்ட ஒரு உலகமாக உள்ளது. இங்கு கடவுளின் படைப்பு சுரண்டப்படுகிறது, இது ஒவ்வொரு நேர்மையான மனசாட்சியாலும் கண்டிக்கப்பட வேண்டிய மற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் ஒரு தீர்க்கமான , ஒரு உண்மையான மனமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், அது நம்மை எதிர் திசையில், மனித சகோதரத்துவம் நிறைந்த ஒரு நிலையான பாதைக்கு அழைத்துச் செல்லும். உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் அழிக்கப்படுகிற அதே வேளையில் அது பல ஆதரவான சகோதர சகோதரிகளால் ஒன்றினைந்து அதனைக் காப்பாற்றவும் செய்கிறார்கள். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியினர், வானத்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் எண்ணற்றவர்கள்.

அழிவின் சுழற்சியும் சகோதரத்துவத்தின் அழைப்பும்

நாம் தான் இந்த மகத்தான மக்கள்! அமைதி என்பது நாம் புதிதாக உருவாக்க வேண்டிய ஒன்றல்ல: நம் அண்டை வீட்டாரை ஒரு சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் தழுவ வேண்டிய ஒன்று. நாம் நம் சகோதர சகோதரிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை: நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்! நாம் ஒரே குடும்பம், ஒரே வீட்டில் வசிக்கிறோம்: பண்டைய கலாச்சாரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பராமரித்து வரும் இந்த அற்புதமான உலகமே அந்த வீடு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (Evangelii Gaudium) என்ற திருத்தூது அறிவுரையின் மடல், உங்கள் வார்த்தைகளைக் கேட்டபோது என் நினைவுக்கு வந்தது: மக்களின் இதயத்தில் இருக்கும் எனது நோக்கம் எனது வாழ்க்கையின் ஒரு பகுதி அல்லது நான் களையக்கூடிய ஒரு அடையாள அட்டை மட்டுமல்ல; அது ஒரு கூடுதல் விடயம் அல்லது வாழ்க்கையின் மற்றொரு தருணம் மட்டுமல்ல. நான் இந்த உலகில் ஏதோ ஒரு நோக்கத்தைச் சுமந்து கொண்டிருக்கவில்லை; நானே ஒரு நோக்கமாக (I am a mission) இருக்கிறேன். இந்த மண்ணில் நான் இருப்பதற்கு இதுதான் ஒரே காரணம்.

நானே ஒரு நோக்கம்: உயிருள்ள நற்செய்தி

பமெண்டாவின் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த உணர்வுகளுடன்தான் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்! நாம் இணைந்து அமைதிக்கு சேவை செய்வோம்! ஒளி, ஆசீர், புத்துயிர் அளித்தல், உயர்த்துதல், குணப்படுத்துதல் மற்றும் விடுவித்தல் ஆகியவற்றை வழங்கும் இந்த நோக்கத்தால் நாம் முத்திரையிடப்பட்டவர்களாக நம்மைக் கருத வேண்டும். நம்மைச் சுற்றி ஆன்மா உள்ள செவிலியர்கள், ஆன்மா உள்ள ஆசிரியர்கள், ஆன்மா உள்ள அரசியல்வாதிகள், மற்றவர்களுடன் இருப்பதற்கும் மற்றவர்களுக்காக இருப்பதற்கும் ஆழமாகத் தேர்ந்தெடுத்தவர்களை நாம் பார்க்கத் தொடங்குகிறோம் (மேற்கோள்).

இவ்வாறு எனது அன்பிற்குரிய முன்னோடி, நம் ஒவ்வொருவருடைய அழைப்பின்படி ஒன்றாக நடக்கவும், நம் சமூகங்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும், உள்ளூர் மட்டத்தில் உறுதியான முயற்சிகளில் தொடங்கி, நமது அண்டை வீட்டாரை அவர் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் நேசிக்கவும் நம்மை வலியுறுத்தினார். இந்த அமைதியான புரட்சிக்கு நீங்களே சாட்சிகள்! இமாம் கூறியது போல், இந்த நெருக்கடி ஒரு மதப் போராக மாற்றப்படாமல் இருப்பதற்கும், நாம் இன்னும் ஒருவரையொருவர் நேசிக்க முயற்சிப்பதற்கும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்! மனச்சோர்வடையாமல், தைரியமாக முன்னேறுவோம், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒன்றாக இருப்போம், எப்போதும் ஒன்றாக இருப்போம்!

Popoe Cameroon Peace meeting community Bamenda

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஏப்ரல் 2026, 10:52