மன்னித்தலே மாற்றத்தின் திறவுகோல்: அல்ஜீரிய மண்ணில் திருத்தந்தையின் அமைதித் தூது
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 13, திங்களன்று அல்ஜீரியாவின் புகழ்பெற்ற தியாகிகள் நினைவுச் சின்னமான மகாம் எச்சாஹித் (Maqam Echahid) நினைவிடத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய உரை.
அன்புள்ள அல்ஜீரிய சகோதர சகோதரிகளே,
உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்!
திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக, தற்போது மீண்டும் உங்கள் நாட்டிற்கு வருகை தரும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். அனைத்திற்கும் மேலாக ஒரு சகோதரனாக நான் உங்களிடம் வருகிறேன்; நம்மை ஒன்றிணைக்கும் அன்பின் பிணைப்பைப் புதுப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் நான் வலிமையான மற்றும் துடிப்பான மக்களைக் காண்கிறேன்; விருந்தோம்பல், சகோதரத்துவம் மற்றும் ஒன்றிப்பு ஆகிய விழுமியங்களுக்காக நீங்கள் பெயர் பெற்றவர்கள். இந்த விழுமியங்களே உங்கள் கூட்டு வாழ்க்கைக்கு வலிமையையும் இதமான அன்பையும் அளிக்கின்றன.
அல்ஜீரியா ஒரு சிறந்த நாடு; அது உன்னதமான மரபுகளால் செதுக்கப்பட்ட, செழுமையான மற்றும் பழமையான வரலாற்றைக் கொண்டது. அதே வேளையில், வேதனையான காலங்களாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட ஒரு வரலாற்றையும் அது சுமந்து நிற்கிறது. இருப்பினும், உங்கள் துணிச்சலாலும் நேர்மையாலும் இந்தச் சோதனைகளை நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மீண்டெழும் பண்பு மாண்பிற்கும் ஒன்றிப்பிற்கும் ஒரு வலிமையான சாட்சியாகத் திகழ்கிறது. இந்த இடத்தில், சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடியவர்களை நாம் நினைத்து பார்த்து அவர்களுக்கு மரியாதை செய்கிறோம். அவர்களது நினைவு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது: உண்மையான அமைதி என்பது வெறும் மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல; மாறாக, அது நீதி, மாண்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் கனியாகும்.
மன்னித்தல் என்பது கடினமான காரியம் என்றாலும், வெறுப்புணர்ச்சி எனும் தீய சக்தியை உடைத்து, ஒரு சமாதானமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அது மிகவும் அவசியமானதாகும். எதிர்காலம் அமைதியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கே சொந்தமானது. இறுதியில் நீதியே வெல்லும்; வன்முறை ஒருபோதும் கடைசி வார்த்தையாக இருக்காது. "பல்வேறு பண்பாடுகளும் நம்பிக்கைகளும் இணையும் இந்த நாட்டில், ஒருவரையொருவர் மதித்து நடப்பதே நாம் முன்னேறிச் செல்வதற்கான சிறந்த பாதையாகும். அல்ஜீரியா, உலக அரங்கில் உரையாடலுக்கும் நிலைத்தன்மைக்கும் என்றும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழட்டும். ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது; அல்ஜீரியா நாடு நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகிய ஆசீர்வாதங்களால் செழுமையாக நிரம்பியுள்ளது. இறைவன் மீதான நம்பிக்கை உங்கள் அடையாளத்தின் மையமாகத் திகழ்கிறது; அது குடும்பங்களை வலுப்படுத்துவதோடு, சகோதரத்துவத்தையும் வளர்க்கிறது.
இறைவனை நேசிக்கும் மக்கள், உண்மையான மற்றும் நிலையான பொக்கிஷத்தைப் பெற்றிருக்கிறார்கள். நிலையற்ற செல்வங்களால் இயக்கப்படும் இவ்வுலகில், கிறிஸ்துவின் ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், அவன் தன் ஆன்மாவை இழப்பாரானால் அவனுக்குக் கிடைக்கும் பயன் என்ன? என்ற இந்த கேள்வி நமக்கு நினைவூட்டப்படுகிறது: உண்மையான சுதந்திரம் என்பது வெறுமனே பெறப்படுவது அல்ல. அது ஒவ்வொரு நாளும் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தங்கள் மக்களின் மீதான அன்பிற்காகத் தங்கள் உயிரையே ஈந்தவர்களின் முன்மாதிரி, நீங்கள் எப்போதும் சுதந்திரம், ஒன்றிப்பு மற்றும் அமைதியின் பாதையில் நடப்பதற்கு உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.
இயேசுவின் மலைப்பொழிவுடன் இந்த உரையை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.*
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.
உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி. இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
