திருத்தந்தையின் புதிய திருத்தூது மடலுக்கு கர்தினால் குபிச் பாராட்டு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அண்மையில் வெளியான 'மாண்புமிகு மனிதநேயம்' எனும் திருத்தூது மடலின் வாயிலாக, கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகளை விருப்பத்திற்குரிய வழிகாட்டுதல்களாகக் கருதாமல், அத்தியாவசிய திருஅவையின் போதனையாக முன்வைத்ததற்காக திருத்தந்தையை கர்தினால் பிளேஸ் குபிச் அவர்கள் பாராட்டியுள்ளார்.
வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், இவ்வாறு கூறியுள்ள சிகாகோவின் பேராயரான கர்தினால் பிளேஸ் குபிச் அவர்கள், செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான 'மாண்புமிகு மனிதநேயம்' (Magnifica humanitas) பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோது தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணம் மனிதகுலத்தை "புதிய எருசலேமை" கட்டியெழுப்புவதற்கோ அல்லது மற்றொரு "பாபேல் கோபுரத்தை" உருவாக்குவதற்கோ இடையிலான சவால் மிகுந்த தேர்வுக்கு அழைக்கிறது என்று கர்தினால் குபிச் அவர்கள் கூறியுள்ளார்.
"புதிய எருசலேம் என்பது கடவுளை மையமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் மற்றும் உறவுகளைப் புதுப்பிக்கும் சமூகத்தை அடையாளப்படுத்துகிறது" என்று எடுத்துக்காட்டிய கர்தினால் குபிச் அவர்கள், இதற்கு மாறாக, "பாபேல் கோபுரம் என்பது செருக்கும் சுயநலமும் நிறைந்த மற்றும் தகவல் தொடர்பும் புரிதலும் சிதைந்து போக வாய்ப்புள்ள உலகத்தை பிரதிபலிக்கிறது" என்றும் குறிப் பிட்டுள்ளார்.
மேலும் "செயற்கை நுண்ணறிவு தங்கள் எதிர்காலத்தை ஆழமாக பாதிக்கும் என்பதால், சிகாகோவில் உள்ள மக்கள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இந்த திருத்தூது மடலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கர்தினால் அவர்கள், நவீன தொழில்நுட்பம் மனிதகுலத்தின் கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லக்கூடும் என்ற திருத்தந்தையின் எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எண்ணிம புரட்சியை தொழில்துறை புரட்சியுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கிடையே ஒற்றுமைகள் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்ப மாற்றங்கள் இன்னும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதனால் திருத்தந்தை விடுத்த அவசர நடவடிக்கைக்கான அழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் கர்தினால் பிளேஸ் குபிச் அவர்கள் கூறியுள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
