தேடுதல்

திருத்தந்தை கருத்தரங்கில் பங்கேற்பாளர்களை வாழ்த்திய போது திருத்தந்தை கருத்தரங்கில் பங்கேற்பாளர்களை வாழ்த்திய போது 

இதயங்களின் ஈரத்தை மீட்டெடுப்போம்: சமயங்கள் கடந்த மனிதாபிமானப் பயணம்

மனிதாபிமானம் மங்கிப்போயுள்ள இடங்களில் அதனை மீட்டெடுக்கவும், அலட்சியத்தைச் சகோதரத்துவ ஒருமைப்பாடாக (Solidarity) மாற்றவும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

இஸ்லாமிய மரபுகளில் இரக்கம் என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட ஒரு கொடையாகக் கருதப்படுகிறது என்றும், இது 'அல்-ரவூப்' (al-Ra’uf) அதாவது 'மிக்க கருணையாளர்' என்ற இறைவனது திருப்பெயரில் பிரதிபலிக்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 11, திங்களன்று, சமயங்களுக்கிடையிலான உரையாடலுக்கான வத்திக்கான் துறையும், மதங்களுக்கு இடையிலான ஆய்வுகளுக்கான அரச நிறுவனமும்  (Royal Institute for Inter-Faith Studies) இணைந்து ஏற்பாடு செய்துள்ள எட்டாவது கருத்தரங்கில் உரையாற்றிய போது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

நவீன காலத்தில் மானுட இரக்கமும் பரிவும்” (Human Compassion and Empathy in Modern Times) என்ற இந்தத் தலைப்பு இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஏனெனில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மரபுகளில் இரக்கம் (Compassion) மற்றும் பரிவு (Empathy) ஆகிய இரண்டும் மிக முக்கியமான விழுமியங்களாகவும், உண்மையான மனித வாழ்வின் மையமாகவும் திகழ்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், மனிதர்களின் துயரங்களைக் கண்டு மனம் உருகி, அவற்றுக்குத் தீர்வு வழங்கும் இறைவனையே கிறிஸ்தவம் நமக்குக் காட்டுகிறது  என்றும், இறைவனின் அந்த எல்லையற்ற கருணை இயேசு கிறிஸ்துவின் வழியாக இவ்வுலகிற்குப் வெளி ப்பட்டது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, மற்றவர்களின் துயரங்களில், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கும்படி திருத்தந்தை அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இரக்கம் என்பது நாம் விருப்பப்பட்டால் செய்யக்கூடிய ஒன்று அல்ல; மாறாக, நமது அன்றாட வாழ்வில் இறைவனின் நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான ஒரு தெய்வீக அழைப்பு என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ வேண்டிய கடமையை வலியுறுத்திய திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் கருத்தை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரைத் தாராள மனதோடு ஆதரித்து வரும் ஜோர்டான் நாட்டின் சேவையைப் வெகுவாகப் பாராட்டினார்.

இன்று,, இரக்கம் எனும் குணம் மங்கிப்போகும் ஆபத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தொழில்நுட்பம் நம்மை ஒருவருக்கொருவர் இணைத்தாலும், தொடர்ந்து மற்றவர்களின் துன்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது நம்மிடையே ஒருவிதமான அலட்சியப் போக்கை உருவாக்கிவிடுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

எனவே எங்கு மனிதநேயம் மங்கிப் போயிருக்கிறதோ, அங்கெல்லாம் மனிதாபிமானத்தை நிலைநாட்டவும், அலட்சியத்தைத் சகோதரத்துவ ஒருமைப்பாடாக (Solidarity) மாற்றவும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இறுதியாக, ஜோர்டான் நாடு தொடர்ந்து உரையாடல், நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழட்டும் என்றும், நமது இந்த ஒத்துழைப்பு அமைதி, பரிவு மற்றும் சுமுகமான புரிதலில் நற்பயன்களைத் தரட்டும் என்றும் கூறி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:27