தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பார்சிலோனாவின் “Círculo Ecuestre” குழுவினரைச் சந்தித்த போது. திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பார்சிலோனாவின் “Círculo Ecuestre” குழுவினரைச் சந்தித்த போது. 

பிறரின் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணிப்பவரே உண்மையான கிறிஸ்தவர்!

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்குத் தங்களை உட்படுத்தி, கிறிஸ்துவின் மீது பார்வையை நிலைநிறுத்துவதன் மூலமே எளிய மக்களிடம் இறைவனைக் காண முடியும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கிறிஸ்துவை நம்பும் ஒவ்வொரு நம்பிக்கையாளரும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளுக்குத் தங்களது வாழ்வைத் திறந்து வைக்கவும், கிறிஸ்தவப் பிறரன்புப் பணியை (Christian charity) வாழ்வாக்குவதற்கு தளராத மனதுடன் தயாராக இருக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறிய திருத்தந்தை, இந்த இறையியல் நற்பண்பே எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இறைவனை அன்பு செய்யவும், அவர் மீதான அன்பின் பொருட்டு நம்மைப் போலவே பிறரையும் அன்பு செய்யவும் நமக்குத் தூண்டுதலாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார்.

மே 25, திங்களன்று, பார்சிலோனாவின் குதிரையேற்றக் கழகத்தின் நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, கிறிஸ்தவர் என்பவர் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் கொடையாளி மட்டுமல்ல, மாறாக பிறரின் முழுமையான நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் இரக்கமுள்ளவரே உண்மையான கிறிஸ்தவர் என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவின் மீது தங்களது பார்வையை எப்போதும் நிலைநிறுத்துமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே, மிகவும் எளிய மற்றும் தேவையிலிருக்கும் நம் சகோதர சகோதரிகளிடம் கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ள முடியும் என்று  எடுத்துக்காட்டினார்.

கடவுளுக்கும் சமூகத்திற்கும் ஆற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையின் மூலமாகவும், தேவையிலிருப்போரைத் தேடிச் சென்று பொறுமையுடனும் இரக்கத்துடனும் அவர்கள் காட்டும் நல்மனதின் மூலமாகவும், ஆண்டவரின் பேரன்பில் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2026, 12:30