கல்வி என்பது வெறும் அறிவல்ல, அது ஒரு மனிதாபிமானப் பணி
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
உண்மையைக் கண்டறிய இளைஞர்கள் துணிவுடன் முன்வர வேண்டும் என்றும், பல்கலைக்கழக வாழ்க்கையை வெறும் ஏட்டுக்கல்வியோடு நிறுத்திக்கொள்ளாமல், அது புதிய உறவுகளைக் கண்டடையவும், கருத்துக்களைப் பரிமாறவும், தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளவும் கிடைத்த ஒரு பொற்காலமாகப் போற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 14, வியாழனன்று, உரோமில் உள்ள சப்யென்சா பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பார்வையின் ஒரு பகுதியாக அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
அப்பல்கலைக்கழகத்தின் கல்விசார் மேன்மை மற்றும் அதன் செயல்பாடுகளைத் பாராட்டிய திருத்தந்தை, குறிப்பாக, போதிய வசதியற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறைக்கைதிகள் மற்றும் போர்ச் சூழல் நிலவும் பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோருக்கு இப்பல்கலைக்கழகம் வழங்கி வரும் ஆதரவை சுட்டிக்காட்டினார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் எதிர்பார்ப்புகள், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, போர்ச் சூழல், மிதமிஞ்சிய ஆயுதச் செலவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடுகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்தார்.
கல்வி, அமைதி, சமூக நீதி மற்றும் இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பல்கலைக்கழகங்கள் வெறும் அறிவாளிகளை மட்டும் உருவாக்காமல், நல்லொழுக்கம் மிக்க மனச்சான்றுகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, கற்பித்தல் என்பது ஒரு மனிதாபிமானப் பணியும் அன்பின் கொடையுமாகும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து அமைதி, நம்பிக்கை மற்றும் மனிதநேயமிக்க எதிர்காலத்தைச் செதுக்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
