தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

இறைவனின் மாட்சிமைக்கு முன்பாக நம் தாழ்ச்சியையும், திருஅவையின் கூட்டுறவிற்கு (ecclesial communion) நாம் கொண்டுள்ள நேர்மையான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்ற அந்த உன்னத உள்மனப்பான்மையிலிருந்து எழுகின்ற வழிபாட்டுமுறை நூல்கள் மற்றும் விதிகளுக்கான மதிப்பினை நீங்கள் எப்போதும் பேணிக்காத்திடுங்கள்;

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 27 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார்.

முதலில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு, நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். (உரோமையர் 15:4–6)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

வணக்கத்திற்குரிய நம் முன்னாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள், தமது ‘இறைநடுவர் ’ (Mediator Dei) என்னும் திருத்தூது மடலில் இவ்வாறு நமக்கு நினைவூட்டுகிறார்: 'நம் புனித திருஅவையானது ஒரு வாழும் உயிரினமாகும். எனவேதான், தன் போதனைகளின் தூய்மையையும் முழுமையையும் அது என்றும் மாறாமல் பாதுகாக்கும் அதே வேளையில், புனித வழிபாட்டு முறையைப் பொறுத்தமட்டிலும், காலந்தோறும் எழுகின்ற பல்வேறு சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, இணக்கமுற்று, தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடைகிறது' (Mediator Dei, I, V). இதே கொள்கையின் அடிப்படையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தனது திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற வழிபாட்டுமுறை ஆவணத்தின் முன்னுரையில், ஒரு முக்கிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, 'வழிபாட்டு முறையைச் சீரமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் தனி அக்கறை செலுத்துவதை இந்த சங்கம் தனது முதன்மைக் கடமையாகக் கருதுகிறது' (எண். 1). உண்மையில், இந்த உலகளாவிய சங்கம் கூட்டப்பட்டதன் நோக்கங்களே இவைதான்: 'நம்பிக்கையாளர்களின் கிறிஸ்தவ வாழ்வில் என்றும் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்துவது; காலமாற்றத்திற்கு உட்படக்கூடிய அமைப்புகளை நம் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் சிறப்பாகத் தகவமைப்பது; கிறிஸ்துவை நம்பும் அனைவரிடையேயும் ஒற்றுமையை வளர்க்கும் எதையும் ஊக்குவிப்பது; மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் திருஅவை என்னும் இறைக்குடும்பத்திற்குள் அழைத்து வர உதவக்கூடிய அனைத்தையும் இன்னும் வலுப்படுத்துவது' ( SC, எண். 1.)

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், திருஅவை பல நூற்றாண்டுகளாக இறைவனை மாட்சிப்படுத்தவும், கிறிஸ்தவ மக்களைப் புனிதப்படுத்தவும் பயன்படுத்தி வந்த வழிபாட்டு முறைகளை மறுமலர்ச்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த ஒரு வலுவான விழிப்புணர்வு நிலவியது. வழிபாட்டுமுறை இயக்கத்தின் விளைவாக, ஒரு ஆழமான போதனை நம்பிக்கையாளர்களின் மனதில் முதிர்ச்சியடைந்தது. இதனைப் பின்னாள்களில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இவ்வாறு எடுத்துரைத்தார்: 'வழிபாட்டு முறையின் மறுமலர்ச்சிக்கும், திருஅவையின் ஒட்டுமொத்த வாழ்வின் மறுமலர்ச்சிக்கும் இடையே மிக நெருக்கமான, பிரிக்க முடியாததொரு பிணைப்பு உள்ளது. திருஅவையானது வழிபாட்டின் வழியாகச் செயலாற்றுவது மட்டுமல்லாமல், அந்த வழிபாட்டின் மூலமாகவே தன்னை வெளிப்படுத்தவும் செய்கிறது; மேலும், தன் வாழ்விற்குத் தேவையான ஆற்றலை அந்த வழிபாட்டிலிருந்தே பெற்றுக்கொள்கிறது' (ஆண்டவரின் இரவுணவு Dominicae Cenae, 13). புனித வழிபாட்டு முறையின் வழியாக நமக்கு வழங்கப்படுகின்ற அருள் கொடைகளின் உன்னத வளங்களை நம்பிக்கையாளர்கள் இன்னும் எளிதாகப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காகவே, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் என்ற ஆவணம் நாம் பின்பற்ற வேண்டிய பாதையை மிக அழுத்தமான ஒரு சூத்திரத்தின் மூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது: 'தூய பாரம்பரியத்தை உறுதியாய்ப் பேணிக்காத்திடுங்கள், அதே வேளையில் நியாயமான வளர்ச்சிக்கும் எப்போதும் திறந்த மனதுடன் இருங்கள்' (SC, 23).

திருஅவையின் மூத்த தந்தையர்களின் 'சீர்திருத்தத் திட்டம்' என்பது, 'கடந்த காலத்தின் உன்னதமான வழிபாட்டுமுறை பாரம்பரியத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதே' என்பதை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இந்த நோக்க அறிக்கையின் மூலம் தெளிவாகப் புரிந்துகொண்டார். மேலும் அவர், 'பல நேரங்களில் பாரம்பரியமும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று முரணானவை எனத் தவறான முறையில், முதிர்ச்சியற்ற நடையோடு பிரிக்கப்படுகின்றன' என்று சுட்டிக்காட்டியதோடு, 'ஆனால் உண்மையில், இவ்விரு கருத்துகளும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை ஆகும்; ஏனெனில், பாரம்பரியம் என்பது தனக்குள்ளேயே ஏதோ ஒரு வழியில் வளர்ச்சியைத் தாங்கி நிற்கிறது. இது எப்படிப்பட்டதென்றால், பாரம்பரியம் என்னும் நதியானது தன் ஊற்றை தனக்குள்ளேயே சுமந்து கொண்டு, தன் முகத்துவாரத்தை நோக்கி பாய்ந்து செல்வதைப் போன்றதாகும்' என்றும் குறிப்பிட்டார் (புனித அன்செல்ம் திருத்தந்தை வழிபாட்டுமுறை நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாக் கருத்தரங்கில் பங்கேற்றோருக்கான உரை, 6 மே 2011). உண்மையான தூய பாரம்பரியத்தில் வேரூன்றிய இத்தகைய வளர்ச்சியின் நியாயமான தன்மையை இப்பொதுச்சங்கம் மிக அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது. அதே வேளையில், புனித வழிபாட்டு முறையில் உள்ள இருவேறு பகுதிகளை அது துல்லியமாகப் பிரித்துக் காட்டுகிறது: 'ஒன்று, இறைவனால் நேரடியாக நிறுவப்பட்டதால் என்றும் மாறாத ஒரு பகுதி; மற்றொன்று, காலப்போக்கில் மாற்றத்திற்கு உட்படக்கூடிய பகுதிகள். இந்த மாற்றத்தக்கப் பகுதிகளில், வழிபாட்டு முறையின் உள்ளார்ந்த இயல்புக்கு முரணான ஏதேனும் ஊடுருவல்கள் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவை காலத்திற்குப் பொருத்தமற்றதாக மாறியிருந்தாலோ, அவை மாற்றப்படலாம், ஏன், மாற்றப்படவும் வேண்டும்' (SC, 21).

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமாக விளங்கும் 'கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில்' (Paschal Mystery of Christ), நம்பிக்கையாளர்கள் அனைவரும் வழிபாட்டுச் சடங்குகளின் வழியாக நற்கனிகள் தரும் வகையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய மாற்றங்கள் பல நூற்றாண்டுகளாகத் திருஅவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. இவ்வாறு, திருஅவையின் வழிபாடானது ஒவ்வொரு காலகட்டத்தின் பண்பாட்டு வடிவங்களிலும் 'மனுவுருவெடுத்து' (incarnate), அவற்றை ஊடுருவி, ஏன், பண்பாடுகளையே உருமாற்றும் ஆற்றல் கொண்டதாகவும் விளங்கியது. இதன் வழியாகவே, புனித வழிபாட்டு முறையானது பல நூற்றாண்டுகளாக நற்செய்தி அறிவிப்பின் (evangelization) உந்துசக்தியாகத் திகழ்ந்து வந்துள்ளது. இன்று, இந்த ஆற்றலை உண்மையான மற்றும் வாழும் கத்தோலிக்கப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியோடு புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதாவது, நம்பிக்கையாளர்கள் அனைவரையும் முழுமையான உண்மையை நோக்கி வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு துடிப்பான இயக்கத்தின் மூலமாகவே இப்புதுப்பித்தல் நிகழ வேண்டும்.

எனவேதான், திருஅவையின் வழிபாட்டுச் சடங்குகளை மறுசீரமைக்கும்போது, அது 'திருஅவைக்கு உண்மையான மற்றும் உறுதியான பயனைத் தருவதாக' இருக்கும் பட்சத்தில், 'புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் எந்தவொரு வடிவமும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வடிவங்களிலிருந்தே ஏதோ ஒரு வழியில் இயல்பாக, உயிரோட்டமாக வளர்ந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்' (SC, 23) என்று பொதுச்சங்கத் தந்தையர்கள் ஏன் பரிந்துரைத்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுமொத்த திருஅவையின் நலனுக்காக, ஒவ்வொரு சீர்திருத்தமும் எப்போதும் 'கவனமான இறையியல், வரலாற்று மற்றும் மேய்ப்புப்பணி ஆய்வுகளுக்குப் பின்னரே' மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறாக, பொதுச்சங்கத்தின் இந்த உன்னதமான போதக அதிகாரம், (Magisterium), நம்பிக்கையாளர்களை எவ்வித குழப்பத்திற்கும் உள்ளாக்கக் கூடாது என்று நம்மை அழைக்கிறது; மேலும், வழிபாட்டு முறைகளில் எவரும் தங்களது சொந்த அதிகாரத்தினைக் கொண்டு எதையும் கூட்டுவதையோ, நீக்குவதையோ அல்லது மாற்றுவதையோ இது திட்டவட்டமாகத் தடைசெய்கிறது (cf. SC, 22). பொதுச்சங்க அரசியல் அமைப்பினால் வலியுறுத்தப்படும் இந்த வளர்ச்சி, எந்தவொரு சூழ்நிலையிலும் திருஅவையின் கூட்டுறவையும் (ecclesial communion) அதன் ஒருமைப்பாட்டையும் சிதைக்காது; மாறாக, அதனை இன்னும் உறுதியாக்கவுமே, வளர்க்கவுமே முற்படுகிறது.

எனவே, இறைமறைபொருட்களின் (divine mysteries) வழிபாட்டைக் கொண்டாடுவதற்குத் தங்களைத் தயாரிக்கும்படி அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக வழிபாட்டு முறைக்குத் தலைமை தாங்கும் திருப்பணியைச் செய்கின்ற அருள்பணியாளர்களுக்கு நான் இந்த அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்: இறைவனின் மாட்சிமைக்கு முன்பாக நம் தாழ்ச்சியையும், திருஅவையின் கூட்டுறவிற்கு (ecclesial communion) நாம் கொண்டுள்ள நேர்மையான நம்பிக்கையையும்  வெளிப்படுத்துகின்ற அந்த உன்னத உள்மனப்பான்மையிலிருந்து எழுகின்ற வழிபாட்டுமுறை நூல்கள் மற்றும் விதிகளுக்கான மதிப்பினை நீங்கள் எப்போதும் பேணிக்காத்திடுங்கள்; அவ்வுளமனப்பான்மையானது இறைவனின் மீது நாம் கொண்டுள்ள திறந்த மனத்தோடும் நம்பிக்கையோடும் கூடிய நம்பிக்கையிலிருந்தே பிறப்பதாகும்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது தி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2026, 13:55