தேடுதல்

தூய ஆவியார் தரும் புத்துயிர்: அன்பினாலும் மன்னிப்பினாலும் உலகை மீட்டெடுக்க திருத்தந்தையின் அழைப்பு!

இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான அமைதி மன்னிப்பிலிருந்து பிறக்கிறது. பாவங்களை மன்னிக்கும் தெய்வீகப் பணியில் நம்மை ஈடுபடுத்தி, உலக வரலாற்றை அன்பினால் உருமாற்ற தூய ஆவியார் உதவுகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தூய ஆவியார் பெருவிழா என்பது நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியான உயிர்ப்பு விழாவாகும் என்று கூறிய திருத்தந்தை, அன்று பயத்தினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்த சீடர்களுக்கு மத்தியில் உயிர்த்த இயேசு தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று கூறி அவர்கள் மீது தூய ஆவியாரைப் பொழிந்தார் என்றும், அந்தத் தூய ஆவியார் இன்றும் நம்மில் செயலாற்றுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

மே 24, புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற தூய ஆவியார் பெருவிழா திருப்பலியில் மறையுரை ஆற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, சிலுவையில் அறையப்பட்ட காயங்களோடு காட்சியளித்த உயிர்த்த இயேசு மரணத்தை வென்ற வாழ்வின் அடையாளமாகத் திகழ்ந்தார் என்றும் எடுத்துக்காட்டினார்.

தூய ஆவியார் கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே அமைதியை ஏற்படுத்துகிறார் என்றும், இந்த அமைதி மன்னிப்பிலிருந்து பிறக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பாவங்களை மன்னிக்கும் தெய்வீகப் பணியில் நம்மையும் ஈடுபடுத்தி, உலக வரலாற்றை அன்பினால் உருமாற்றுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், "தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்ற இயேசுவின் வாக்குறுதியின்படி, நற்செய்தியை அறிவிக்க தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவர் தரும் நம்பிக்கையே நம்மை நற்செயல்களிலும் இரக்கப் பணிகளிலும் ஈடுபடச் செய்கிறது என்றும் வலியுறுத்தினார்.

தூய ஆவியார் நம்மை உண்மையில் வழிநடத்தி, திருஅவையில் ஒற்றுமையை உருவாக்குகிறார் என்று கூறிய திருத்தந்தை, பாரபட்சம் மற்றும் வெளிவேடங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து, இறைவனின் உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க நமக்கு உதவுகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, அருட்சாதனங்கள் வழியாக தூய ஆவியார் இன்றும் இடைவிடாது நமக்குப் புனிதத்தை வழங்குகிறார் என்று மொழிந்த திருத்தந்தை, போரின் தீமையிலிருந்தும், வறுமை மற்றும் பாவத்திலிருந்தும் இந்த உலகம் விடுபடவும், அன்பின் வல்லமையால் அமைதி நிலவவும் ஆவியாரின் அருளை வேண்டி அன்னையாம் மரியாவின் பரிந்துரையில் அனைவரையும் ஒப்படைத்து திருத்தந்தை தனது மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 மே 2026, 12:30