தேடுதல்

புனித பியோ அவர்களால் தொடங்கப்பட்ட இத்தாலியின் முக்கிய மருத்துவ நிறுவனமான ‘துன்பம் தணிக்கும் இல்ல அறக்கட்டளையை' புனித பியோ அவர்களால் தொடங்கப்பட்ட இத்தாலியின் முக்கிய மருத்துவ நிறுவனமான ‘துன்பம் தணிக்கும் இல்ல அறக்கட்டளையை' 

இத்தாலிய மருத்துவமனையின் தொண்டுப் பணிகளைப் பாதுகாக்க திருத்தந்தையின் புதிய திட்டம்!

சான் ஜியோவானி ரொட்டோண்டோவில் புனித பியோ அவர்களால் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘துன்பம் தணிக்கும் இல்ல அறக்கட்டளை’ (Casa Sollievo della Sofferenza) மருத்துவமனையின் நிர்வாகத் திறன் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை வலுப்படுத்த, திருத்தந்தை ஒரு புதிய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

சான் ஜியோவானி ரொட்டோண்டோவில் புனித பியோ அவர்களால் தொடங்கப்பட்ட இத்தாலியின் முக்கிய மருத்துவ நிறுவனமான ‘துன்பம் தணிக்கும் இல்ல அறக்கட்டளையை' (Casa Sollievo della Sofferenza Foundation) வழிநடத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய குழுவை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அமைத்துள்ளார். இந்த மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் தொண்டுப் பணிகளின் நோக்கத்தை மாறாமல் பாதுகாக்கும் அதே வேளையில், அதன் செயல்திறன், வீரியம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை வலுப்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் குழுவிற்கு பொருளாதார செயலகத்தின் (Secretariat for the Economy) அதிபரான மேக்சிமினோ கபாலிரோ லெடோ அவர்கள் (Maximino Caballero Ledo) தலைமை தாங்குவார், மேலும் திருத்தந்தை ஆட்சி பீடத்தின் சொத்து நிர்வாக அமைப்பின் (APSA) செயலாளரான ஃபாபியோ காஸ்பெரினி அவர்கள் (Fabio Gasperini) இதனை ஒருங்கிணைப்பார். இதன் உறுப்பினர்களாக பேராயர் பாவ்லோ ருடெல்லி (Archbishop Paolo Rudelli), பேராயர் ஜியார்டானோ பிசினொட்டி (Archbishop Giordano Piccinotti) மற்றும் பேராயர் ஜியோர்ஜியோ ஃபெரெட்டி (Archbishop Giorgio Ferretti) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் தொழில்நுட்பக் குழுவிற்கு (Technical Committee) முனைவர் பெஞ்சமின் எஸ்டீவெஸ் டி காமிங்கஸ் (Dr. Benjamín Estévez de Cominges), முனைவர் ஜினோ குமிராடோ (Dr. Gino Gumirato) மற்றும் வழக்கறிஞர் அலெஸாண்ட்ரோ எலா ஓயானா (Attorney Alessandro Ela Oyana) ஆகியோரையும் திருத்தந்தை நியமித்துள்ளார்.

இந்த முடிவை அறிவிக்கும் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ மடலில் (chirograph), தொழில்நுட்பம், சட்டம், பொருளாதாரம் மற்றும் நலவாழ்வு ஆகிய துறைகளில் இன்றுள்ள சவால்களுக்கு தொடர்ச்சியான புதுப்பித்தலும் விவேகமான நிர்வாகமும் தேவை என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இந்த அறக்கட்டளையின் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, அதன் பொருளாதாரம், செயல்பாடு மற்றும் நிர்வாகப் பகுதிகளில் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தங்குமிடம், உதவி மற்றும் மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்காகப் புனித பியோ அவர்களால் தொடங்கப்பட்ட இந்த ‘துன்பம் தணிக்கும் இல்லம்’ இன்றும் கிறிஸ்தவ தொண்டு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த உன்னதமான நோக்கம் எதிர்காலத்திலும் நம்பிக்கையோடு தொடர்வதை உறுதி செய்வதையே திருத்தந்தை அவர்களின் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 14:45