தேடுதல்

பொலிவிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பொலிவிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் 

உண்மை எப்போதும் அன்பினால் வழிநடத்தப்பட வேண்டும்!

கல்வி என்பது வெறும் தொழில்நுட்பப் பயிற்சி அல்லது தற்காலிகப் பயனுக்கானது மட்டுமல்ல. அது மாணவர்களிடம் அக ஆற்றல், ஒழுக்கம், பொறுப்புள்ள சுதந்திரம் மற்றும் பொதுநல அர்ப்பணிப்பு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு உண்மையான கல்விச் சமூகமாக இருக்க வேண்டும்.

ஜான்சிராணி  அருளாந்து -‌ வத்திக்கான்

உண்மையான கல்வி என்பது ஒரு மனிதனின் அக ஆற்றலை முழுமையாக மேம்படுத்துவதாய் அமைய வேண்டும் என்றும், அது அறிவுச் சுடரையும் ஒழுக்க நெறிகளையும் வளர்ப்பதோடு, பொறுப்புணர்வு மிக்க சுதந்திரத்தையும், சமுதாயப் பொதுநலனுக்கான அர்ப்பணிப்பையும் மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்றும்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளார்.

பொலிவிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்  (Bolivian Catholic University) தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி (60th Anniversary) அனுப்பிய வாழ்த்துக் கடிதமொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் இப்பல்கலைக்கழகம் ஆற்றிய ஆறு தசாப்த கால சேவைகளுக்காகத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் என்பது வெறும் தொழில்நுட்பப் பயிற்சிக்கான அல்லது பயனுள்ள அறிவை உருவாக்குவதற்கான ஒரு மையம் மட்டுமல்ல என்றும், மாறாக, அது ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக மனித மாண்பை யும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உண்மையான கல்விச் சமூகம் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இப்பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரமான “Veritas in Caritate” (அன்பில் உண்மை) என்பது குறித்துப் பேசிய திருத்தந்தை , கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை உண்மை என்பது இறுதியில் இயேசு கிறிஸ்துவின் ஆளுமையில்தான் கண்டறியப்படுகிறது என்றும், அவரே கடவுளையும், மனிதகுலத்தின் மிக உன்னதமான அழைப்பையும் வெளிப்படுத்துகிறார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அறிவுசார்ந்த உன்னதத்தோடும் (Intellectual Rigor) அறிவியல் நேர்மையோடும் தேடப்படும் உண்மை, எப்போதும் பிறரன்பினால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும், அது நீதி, மனித மாண்பு மற்றும் வலுக்குறைந்தவர்களின்  நலனுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை  வலியுறுத்தினார்.

இறுதியாக நம்பிக்கையையும் அறிவாற்றலையும், அறிவையும் ஒழுக்கநெறியையும், கல்விசார் உன்னதத்தையும் சமூகப் பொறுப்பையும் தொடர்ந்து ஒன்றிணைத்துச் செயல்படுமாறும்; அதன் வழியாகச் சமுதாயத்திற்கு ஒரு பேரொளியாகவும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் சாட்சியாகவும் திகழுமாறும் பல்கலைக்கழகச் சமூகத்திற்கு திருத்தந்தை அழைப்பு விடுத்து செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2026, 12:39