நெருப்பு நிலத்தில் ஒரு புதிய விடியல்: வாழ்வையும் படைப்பையும் பாதுகாப்போம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மே 23, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இத்தாலியின் காம்பானியா மாநிலத்திலுள்ள நெருப்பு நிலம் (Land of Fires) என்று அழைக்கப்படும் அசெர்ரா நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக அங்குள்ள நகராட்சிகளின் தலைவர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களை காலிபாரி சதுக்கத்தில் சந்தித்து உரையாடினார்.
அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
இன்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். எத்தகைய அநீதியாலும் அழித்துவிட முடியாத அழகைக் கொண்ட இந்த அசெர்ரா மண்ணில், இன்றைய நாளை உங்களோடு செலவிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு அழகு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அது கூடுதல் அக்கறையையும் பொறுப்புணர்வையும் கோருகிறது. அதற்காகவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்: இந்த மண்ணில் வாழ்வையும் மனித மாண்பையும் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவிக்கவே நான் வந்துள்ளேன்.
சிறிது நேரத்திற்கு முன்னதாக, 'நெருப்பு நிலம்' (Land of Fires) என்று அறியப்படும் இப்பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களை நான் சந்தித்தேன். உங்கள் கண்ணீரையும் துயரத்தையும் எனது இதயத்தில் சுமந்து நிற்கிறேன். அதே வேளையில், 'இறைவா உமக்கே புகழ் (Laudato si') செய்தியை ஏற்று, துணிச்சலுடன் அதற்குப் பதிலளித்து வரும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நம்பிக்கை, ஒருமைப்பாடு மற்றும் அருள்வாக்குச் சாட்சியத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள்.
அன்பு நண்பர்களே, இந்த மண்ணில் வாழ்வு இன்னும் மரணத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டு தான் இருக்கிறது, இறுதியில் நீதியே வெல்லும். ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் வாழ்வையே தேர்ந்தெடுக்க வேண்டும். கையறு நிலை, சமரசம் செய்துகொள்ளுதல் மற்றும் அலட்சியம் காட்டுதல் ஆகியவை சட்டவிரோதச் செயல்களுக்கும் அநீதிக்கும் மட்டுமே வலுசேர்க்கும். நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று, நீதியைத் தேர்ந்தெடுத்து, சுயநலத்தை விடப் பொது நலனுக்காகப் பணியாற்ற வேண்டும். இந்த மண் பெரும் துயரத்தைச் சந்தித்துள்ளது. ஏராளமான குழந்தைகளும் அப்பாவி மக்களும் வலியையும் இழப்பையும் அனுபவித்துள்ளனர். அவர்களின் துயரம், நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நம்மை அழைக்கிறது.
உண்மையான சூழலியல் கலாச்சாரம் என்பது அவசரத் தேவைகளுக்குத் தீர்வுகாண்பது மட்டுமல்ல. அதற்கு நமது சிந்தனை முறை, வாழ்க்கை முறை மற்றும் ஒருவரோடு ஒருவர் பழகும் முறை ஆகியவற்றில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. படைப்பின் மீதும் வருங்கால சந்ததியினர் மீதும் நமக்கு ஒரு மனமாற்றமும், புதிய பொறுப்புணர்வும் அவசியம். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைவருக்கும் இதைப் பற்றிய கல்வி மிகவும் இன்றியமையாதது.
இந்த மண் நஞ்சாக்கப்படுவதை முதலில் துணிச்சலுடன் கண்டித்து, மக்களின் மாண்பைப் பாதுகாத்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நாம் ஒவ்வொரு அடியாக முன்வைத்து, உறவுகளுக்கும், ஒருமைப்பாட்டிற்கும், நமது பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கும் மதிப்பளிக்கக்கூடிய, அதிக நீதியுள்ள மற்றும் சுயநலமற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அசிசி நகர் புனித பிரான்சிஸ், நம்மை அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் காவலர்களாக மாற்றத் தூண்டுவாராக. இந்த மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் ஒரு புதிய விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் நாம் இருப்போம். நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
