தேடுதல்

திருத்தந்தை வத்திக்கான் வானியல் ஆய்வு அறக்கட்டளையின் நிர்வாக குழுவைச் சந்தித்த போது திருத்தந்தை வத்திக்கான் வானியல் ஆய்வு அறக்கட்டளையின் நிர்வாக குழுவைச் சந்தித்த போது  (ANSA)

உண்மைக்கான தேடலில் அறிவியலும் நம்பிக்கையும்!

திருஅவை அறிவியலுக்கு எதிரானது அல்ல, மாறாக உண்மையான அறிவியலைத் தழுவி ஊக்குவிக்கிறது என்பதை நிலைநாட்டவே 135 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்கள் வானியல் ஆய்வு மையத்தை மீண்டும் நிறுவினார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், இயற்கையையும் மனிதர்களையும் பொறுப்பற்ற முறையில் சுரண்டுவதிலிருந்து எளியவர்களைக் காப்பதற்கும் நமக்கு இருக்கும் கூட்டுப் பொறுப்பை இன்று பலர் புறக்கணிக்கிறார்கள் என்றும், அதனால்தான், நேர்மையான அறிவியலுக்குத் திருஅவை அளிக்கும் ஆதரவு இன்றும் அவசியமான ஒன்றாகத் தொடர்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 11, திங்களன்று, வத்திக்கான் வானியல் ஆய்வு மைய அறக்கட்டளையின் (Vatican Observatory Foundation) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

திருப்பீடத்திற்கும் (Holy See) மற்றும் உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவைக்கும் (Universal Church) சேவையாற்றி வரும் வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை, நூற்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்கள், திருஅவை உண்மையான அறிவியலுக்கு எதிரானது அல்ல, மாறாக அதனைத் தழுவி ஊக்குவிக்கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த வானியல் ஆய்வு மையத்தை மீண்டும் நிறுவினார் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் ஒரு காலத்தில் அறிவியலும் மதமும் எதிரெதிர் துருவங்களாகக் கருதப்பட்டாலும், இன்று அவை இரண்டும் அதைவிட ஆழமான ஒரு சவாலை எதிர்கொள்கின்றன என்றும், அதுதான் புறநிலை உண்மையை (Objective truth) மறுப்பதாகும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படவும், மாணவர்களுக்குக் கல்வியறிவு வழங்கவும், கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் பங்குகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகை செய்கிறது என்றும், உங்களின் இந்த அர்ப்பணிப்பின் மூலம், இந்த ஆய்வு மையத்தின் தொலைநோக்கிகளும் (Telescopes) ஆய்வகங்களும், படைப்பின் அழகினைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆராயும் இடங்களாகத் தொடர்ந்து திகழ்கின்றன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், இறைவன் தன்னை இந்தப் படைப்பின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் என்றும், கிறிஸ்துவின் மனுவுருவாதல் (Incarnation) வழியாக இப்படைப்பிற்குள் அவர் நுழைந்தார் என்றும் நம்புகிறோம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்தப் பேரண்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நமது விருப்பம், இறைவனுக்காக மனிதகுலம் கொண்டுள்ள ஆழமான ஏக்கத்தையே பிரதிபலிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் தூதுப்பணியில் வானியல் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் அழகு நம்முள் வியப்பைத் தூண்டுவதோடு, இறைவனின் மகத்துவத்தையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. மனிதகுலம் அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சில பொக்கிஷங்களில் இரவு வானமும் ஒன்று. இருப்பினும், விண்ணுலகைக் காண முடியாமல் நம்மைக் குருடாக்கும் செயற்கை ஒளி மாசினால் (Artificial light), இந்த விலைமதிப்பற்ற பரிசு கூட இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:08