திருத்தந்தையுடன் ஸ்பெயின் அரசுத் தலைவர் சந்திப்பு !
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மே 27, புதனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டின் அரசு தலைவர் பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்டெஜோன் (Pedro Sánchez Pérez-Castejón) அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையுடனான இந்த சந்திப்பிற்கு பிறகு பெரெஸ்-காஸ்டெஜோன் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து இந்த சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் திருத்தந்தையின் வரவிருக்கும் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் குறித்து இருதரப்பும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின என்றும், இந்த திருத்தூதுப் பயணம், திருப்பீடத்திற்கும் ஸ்பெயினுக்கும் இடையே நிலவும் நல்லுறவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், இருதரப்பிலான மரியாதையின் அடிப்படையில் பொது நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உள்ளூர் கத்தோலிக்க திருஅவைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையேயும், அதே போல் குடிமைச் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இடையேயும் பலனளிக்கும் பேச்சுவார்த்தைகளை வளர்க்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட இருதரப்பு பொதுவான நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது என்று அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உரையாடலின் போது அனைத்துலக பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என்றும், குறிப்பாக, உலகெங்கும் நடக்கும் மோதல்களின் தாக்கங்கள், புலம்பெயர்தல் (Migration), பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் (Multilateralism), அனைத்துலகச் சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் அமைதிக்கான ஆதரவில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அவசரத் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் அச்செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
