தேடுதல்

அன்பும் நீதியுமே இறைவனை அடையும் வழி!

விண்ணேற்றம் என்பது ஒரு கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல; அது நம்பிக்கையாளர்களை இயேசுவோடு ஒன்றிணைத்து, கடவுளுடனான முழுமையான ஒன்றிப்பை நோக்கி வழிநடத்தும் ஒரு வாழும் மறைபொருள்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

விண்ணேற்றம் என்பது ஏதோ கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல; அது நம்பிக்கையாளர்களை இயேசுவோடு ஒன்றிணைக்கும் ஒரு வாழும் மறைபொருளாகும் என்றும், அவர் மனிதகுலம் முழுவதையும் கடவுளுடனான முழுமையான ஒன்றிப்பை நோக்கி வழிநடத்துகிறார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 17, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை மொழிந்தார்.

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவன்று, கிறிஸ்து தந்தையிடம் திரும்பியதையும், அதன் வழியாக மனிதகுலத்திற்கு கிடைத்துள்ள வாழ்வின் நம்பிக்கையையும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இயேசுவின் மண்ணுலக வாழ்வு இறைவனை நோக்கிய ஒரு பயணமாகும் என்றும், அவர் மனிதநேயத்தோடு இந்த உலகை ஏற்று, இருளையும் அநீதியையும் நீக்கி மன்னிப்பையும் நம்பிக்கையையும் அளித்தார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும் தனது இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாகப் பாவத்தையும் சாவையும் வென்ற ஆண்டவர், நமக்காக நிலைவாழ்வின் கதவைத் திறந்து வைத்துள்ளார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இறைவாழ்வில் பங்குபெற அழைக்கப்படுவதை விண்ணேற்றம் நினைவூட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

உண்மை, நீதி மற்றும் அன்பை நோக்கி நம் உள்ளங்களை உயர்த்த இந்த விண்ணேற்றப் பெருவிழா அழைப்பு விடுக்கிறது என்றும், இதன் மூலம், திருமுழுக்கில் நாம் பெற்ற இறையருள் நம்மில் வளர்ந்து, உலகில் அமைதியையும் ஒன்றிப்பையும் உருவாக்க வழிவகுக்கிறது என்றும் திருத்தந்தை மொழிந்தார்.

இயேசுவே தந்தையிடம் செல்வதற்கான வழி என்பதை அவரது வாழ்வும், போதனைகளும், தியாகமும் நமக்குக் காட்டுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அன்னை மரியாளும் புனிதர்களும் இந்த ஆன்மீகப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்றும், அன்றாட வாழ்வில் நற்செய்தியை உண்மையாக வாழ்ந்து காட்டும் புனிதர்களும் நமக்குச் சிறந்த முன்மாதிரிகளாக திகழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, புனிதர்களின் வாழ்வும் இறைவேண்டலும், நம்மைத் தினந்தோறும் விண்ணகம் நோக்கி வழிநடத்துகின்றன என்றும், விண்ணக அரசியான அன்னை மரியா, இறைவனை நோக்கிய நமது பயணத்தில் என்றும் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பாராக என்றும் கூறி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மே 2026, 13:48