தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ திருத்தந்தை 14ஆம் லியோ  (ANSA)

கத்தோலிக்க - கோப்திக் திருஅவைகளின் உறவை வலுப்படுத்த திருத்தந்தை அழைப்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ, கோப்திக் மரபுவழி திருஅவையின் திருத்தந்தை இரண்டாம் தவார்ட்ரோஸ் ஆகியோரிடையே சுமுகமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

போர்கள் மற்றும் பிரிவினைகள் நிறைந்த இக்காலத்தில், கத்தோலிக்க - கோப்திக் நட்பு தினத்தை முன்னிட்டு, அலெக்சாந்திரியாவின் கோப்திக் மரபுவழி திருஅவையின் திருத்தந்தையும் புனித மாற்குவின் திருப்பீடத்தின் முதுபெரும்தந்தையுமான இரண்டாம் தவார்ட்ரோஸ்  அவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலிலும் அவருக்கு எழுதிய கடிதத்திலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அவசியத்தை திருத்தந்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல் மிகுந்த சுமுகமான மற்றும் சகோதரத்துவச் சூழலில் நடைபெற்றது என்றும், நம்பிக்கை  மற்றும் தொண்டு ஆகியவற்றின் அடிப்படையிலான உரையாடல்களுக்கு இடையே உள்ள தடைகளைக் கடந்து, கோப்திக் (Coptic) கிறிஸ்தவர்கள் மற்றும் கத்தோலிக்கர்களுக்கு இடையிலான நட்பு தினக் கொண்டாட்டத்தைப் புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் இருதரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

நற்செய்தியை அறிவிப்பதிலும், குறிப்பாகப் பெரும் பதற்றத்திற்குள்ளாகியிருக்கும் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் சமரசத்தை ஊக்குவிப்பதிலும் இருதரப்புக்கும் இருக்கும் கூட்டுப் பொறுப்புணர்வை இந்த உரையாடல் வெளிப்படுத்தியதாக அச்செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய பாரம்பரியத்தின்படி, கத்தோலிக்க - கோப்திக் கிறிஸ்தவர்களின் நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், 21 கோப்திக் தியாகிகளின் நினைவஞ்சலி உள்ளிட்ட பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளையும் சமரசங்களையும் சுட்டிக்காட்டியதுடன்  இரு திருஅவைகளுக்கும் இடையே ஒற்றுமை, அமைதி மற்றும் ஆன்மீகப் பிணைப்பை வளர்க்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்க - கீழைநாட்டுத் திருஅவைகளின் அனைத்துலக இறையியல் ஆணைக்குழு தன் பணிகளை விரைவில் தொடர வேண்டும் என்றும், நைசியா சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவு  இருதரப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 11:41