டிஜிட்டல் யுகத்தில் மனித மாண்பும் திருஅவையின் வழிகாட்டுதலும்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தச் சூழலில், மனிதகுலத்தை உண்மை மற்றும் மீட்பின் பாதையில் வழிநடத்துவதே திருஅவையின் முதன்மையான கடமையாகும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 22, வெள்ளியன்று, 60-வது உலகத் தகவல் தொடர்பு தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற, ஊடக மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த அனைத்துலக மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
டிஜிட்டல் ஊடகங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை மனித மாண்பைக் குறைப்பதாக இருக்கக்கூடாது என்று மொழிந்த திருத்தந்தை, இவை அனைத்தும் மனித மாண்பைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், மனிதகுலத்திற்குத் தொண்டாற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உரையாடல் மென்பொருள்கள் (Chatbots) மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள், உண்மையான மனித உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், 'மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்ன' என்பது குறித்த குழப்பத்தை உருவாக்கக்கூடும் என்றும் திருத்தந்தை எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தற்போது நாம் எதிர்கொள்ளும் சவாலானது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல, அது மானிடவியல் (Anthropological) சார்ந்ததும் ஆகும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அதாவது, இது மனித அடையாளம் மற்றும் விழுமியங்கள் குறித்த மிக முக்கியமான கேள்வியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடவுளையும் மனித வாழ்வின் உண்மையான அர்த்தத்தையும் வெளிப்படுத்தும் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே மனிதகுலத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று வலியுறுத்திய திருத்தந்தை,"மனிதக் குரலையும் முகத்தையும்" பாதுகாப்பது என்பது மனித மாண்பையும் தனிமனித அடையாளத்தையும் பாதுகாப்பதாகும் என்று எடுத்துக்காட்டினார்.
கல்வி முறைகளில் ஊடகம், தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வியறிவை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு திருஅவைக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், விமர்சன சிந்தனையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொழில்நுட்பத்தைச் சீரான மற்றும் ஒழுக்கமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, தொழில்நுட்பமானது ஞானத்தாலும் தார்மீக விழுமியங்களாலும் வழிநடத்தப்படும்போது, அது கடவுளின் படைப்புத் திட்டத்தோடு இணக்கமாக இருப்பதோடு, மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியும் என்று கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
