உமது அரசு வருக: காயப்பட்ட உலகின் காயங்களை ஆற்றும் இறைவேண்டல்!
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
இயேசு கிறிஸ்துவில் கடவுள் உண்மையாகவே மனிதரோடு ஒன்றிணைந்தார் என்றும், அவர் இன்றும் தூய ஆவியாரின் துணையோடும் திருஅவையின் மறைபொருள் வாழ்வின் வழியாகவும் நம்மோடு இடைவிடாது உடனிருக்கிறார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
‘உமது அரசு வருக 2026’ எனும் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் முன்னெடுப்பில் இணைந்துள்ள அனைவருக்கும் காணொளி வாயிலாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருத்தந்தை, இந்த இறைவேண்டல் முயற்சியில் பங்கேற்போர் அனைவருடனும் தான் ஆன்மீக ஒருமைப்பாட்டுடன் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
'இம்மானுவேலே, வாரும்' என்ற திருவருகைக்காலத்தின் அழைப்பைக் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மானுடத்தின் காயங்களை ஆற்றவும், பாவங்களிலிருந்து விடுவிக்கவும், சிதைவுற்ற இவ்வுலகிற்குப் புத்துயிர் அளிக்கவும் இறைவனின் திருவருளுக்காகக் கிறிஸ்தவர்கள் இடைவிடாது தாகம் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
மேலும், புனித அகுஸ்தினின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, 'மனித இதயம் இறைவனில் ஓய்வுகொள்ளும் வரை அமைதியற்றதாகவே இருக்கும்' என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்.
பாஸ்கா காலத்தில், உயிர்த்த ஆண்டவர் இன்றும் தம் மக்களிடையே உடனிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் உயிர்ப்பிற்காக நன்றியறிதலோடு கிறிஸ்தவர்கள் 'அல்லேலூயா' என்று முழங்குகிறார்கள் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நற்செய்தியின் மகிழ்ச்சியைத் தங்களுக்குள்ளேயே முடக்கிவிடாமல், விசுவாசமிக்கச் சொற்கள் மற்றும் நற்செயல்கள் வழியாக அதனை உலகிற்குத் துணிவுடன் அறிவிக்க வேண்டும் என்று நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, 'உமது அரசு வருக' என்ற இந்த ஒன்பது நாள் நவ நாள் செபத்தை (Novena), இறைவனின் மீட்பளிக்கும் அன்பை அனைவரும் உணர்ந்து கொள்ளச் செபிக்கும் ஒரு அருட் பெரும் வாய்ப்பாக வர்ணித்தார்.
இறுதியாக, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அமைதியையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் சிற்பிகளாகத் திகழ வேண்டும் என்றும், உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகளாகத் தங்கள் அன்றாட வாழ்வை மகிழ்ச்சியுடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
