தேடுதல்

அசெர்ரா நகருக்கு வந்தடைந்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அசெர்ரா நகருக்கு வந்தடைந்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள்  (@Vatican Media)

திருத்தந்தையின் அசெர்ரா வருகை

இத்தாலியின் அசெர்ரா நச்சுக்கழிவுப் பகுதிக்கான திருத்தந்தையின் வருகை, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு உலகளாவிய கவனத்தையும் நம்பிக்கையையும் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நச்சுக்கழிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நெருப்பு நிலப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அசெர்ரா நகருக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணம் ஒரு முக்கிய அடையாளமாக வரவேற்கப்படுகிறது.

திருத்தந்தையின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் சங்கத்தின் தலைவர், வழக்கறிஞர் வாலண்டினா சென்டோன்ஸ் அவர்கள், திருத்தந்தையின் வருகை நம்பிக்கையைத் தருவதோடு, அதிகாரிகள் மீண்டும் அலட்சியமாகவும் செயலற்றதாகவும் மாறுவதைத் தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இத்தாலிய அரசு தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு ஆகியும், தூய்மைப் பணிகள் இன்னும் வேகம் எடுக்கவில்லை என்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய கண்காணிப்பு இல்லாததாலும், அரசுத் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும் நச்சுக்கழிவுகள் கொட்டப்படுவது இன்னும் தொடர்கிறது;  இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மாசுபட்ட மண் மற்றும் நிலத்தடி நீர் காரணமாக, காம்பானியா மாநிலத்திலேயே அசெர்ரா நகரில்தான் புற்றுநோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும் புற்றுநோய் மருத்துவருமான அன்டோனியோ மார்ஃபெல்லா அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

பல தசாப்த கால அலட்சியத்திற்கு மத்தியிலும், நீதிக்காகவும், வெளிப்படைத்தன்மைக்காகவும், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காகவும் பொதுமக்களும், சங்கங்களும், ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். திருத்தந்தையின் இந்த வருகை, நச்சு மாசினாலும் நோய்களாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலை உலகிற்கு எதிரொலிப்பதோடு, அவர்களின் போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் புதிய கவனத்தையும் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 11:03