தேடுதல்

'உரோமில் லியோ' ஆவணப்படத்தை வெளியிடும் வத்திக்கான் செய்திகள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உரோம் வாழ்வையும் திருப்பணியையும் சித்தரிக்கும் "உரோமில் லியோ" (Leo in Rome) என்ற புதிய ஆவணப்படத்தை வத்திக்கான் செய்திகள் ஜூலை 1ஆம் தேதி வெளியிடுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்வுப் பயணத்தை எடுத்துரைக்கும் "உரோமில் லியோ" (Leo in Rome) என்ற புதிய ஆவணப்படத்தை, வத்திக்கான் செய்திகள் ஜூலை 1ஆம் தேதி வெளியிடவுள்ளது.

ஏற்கனவே வெளியான "லியோன் தே பெரு" (León de Perú) மற்றும் "சிக்காகோவிலிருந்து லியோ" (Leo from Chicago) ஆகிய ஆவணப்படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், தற்போதைய திருத்தந்தை பதினான்காம் லியோவான ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்த் அவர்கள், உரோம் நகரில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் வாழ்ந்த மற்றும் பணியாற்றிய காலத்தை மையமாகக் கொண்டுள்ளது.

1981ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இத்தாலி வந்தது முதல், புனித அகுஸ்தினார் சபையின் தலைவராக இரண்டு முறை பணியாற்றியது, பின்னர் ஆயர்களுக்கான திருப்பீடப் பேராயம் (Dicastery for Bishops) தலைவராக நியமிக்கப்பட்டதும், 2023ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டதும் வரை அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள், மேலும் அவருடன் பணியாற்றிய அகுஸ்தினார் துறவிகள், முன்னாள் வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திருப்பீடப் பேராய உறுப்பினர்களின் சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணப்படம், திருத்தந்தையின் பெரு நாட்டிலான மறைப்பணியை எடுத்துரைத்த "லியோன் தே பெரு" மற்றும் அவரது அமெரிக்க வேர்களை அறிமுகப்படுத்திய "சிக்காகோவிலிருந்து லியோ" ஆகிய ஆவணப்படங்களின் தொடராக அமைகிறது.

திருப்பீட தகவல் தொடர்புத் துறையின் ஆசிரியர் இயக்ககத்தின் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை, செய்தியாளர்கள் பெலிப்பே எர்ரேரா-எஸ்பாலியாத், சல்வத்தோரே செர்னூசியோ, டிசியானா கம்பிசி ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆவணப்படம், ஜூலை 1, செவ்வாய்க்கிழமை, உரோம் நேரப்படி மாலை 6 மணிக்கு, வத்திக்கான் செய்திகள் யூடியூப் பக்கத்தில் ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளில் முதற்கட்டமாக வெளியிடப்படும். மேலும், அனைத்துலக ஊடகங்களுக்கும் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு, திருப்பீட செய்தித் தொடர்பகத்தால் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்களுக்காக, வத்திக்கான் திரைப்பட நூலகத்தில் சிறப்புத் திரையிடலும் நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 12:12