துறப்பும் தியாகமும் விருந்தோம்பலும் கிறிஸ்துவின் உண்மையான சீடத்துவத்தின் அடையாளங்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இயேசுவைப் பின்பற்றுவது வெளிப்புற செயல்களில் மட்டுமல்ல, அவரோடு முழுமையான அன்புறவை ஏற்படுத்திக்கொள்வதில் உள்ளது என்றும், உண்மையான அன்பு சில நேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமானவற்றிலிருந்தும் துறந்து வாழ அழைக்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூன் 28 , ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மத்தேயு நற்செய்தியை மேற்கோள்காட்டி கிறிஸ்துவின் சீடராக வாழ்வதற்கு துறப்பு, தியாகம் மற்றும் விருந்தோம்பல் ஆகிய மூன்று பண்புகள் இன்றியமையாதவை என்று வலியுறுத்தினார்.
குடும்ப உறவுகள்கூட கிறிஸ்துவின் அன்பில் நிறைவடைகின்றன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பிறரை வளரச் செய்வதற்காக சில நேரங்களில் விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இன்றைய உலகம் இழப்பை பலவீனமாகக் கருதினாலும், தன்னை பிறருக்காக அர்ப்பணிக்கும் அன்பே உண்மையான பலனைத் தருகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பிறருக்காக நேரத்தை ஒதுக்குதல், ஆறுதல் அளித்தல், தன்னலமின்றி பகிர்ந்துகொள்தல் போன்ற சிறிய தியாகங்களே இறையன்பின் வெளிப்பாடுகள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், விருந்தோம்பல் என்பது அன்பின் செயல்பூர்வமான அடையாளம் என்றும், தாகமுள்ள ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுப்பதுபோன்ற சிறிய செயல்கள்கூட இறைவனின் அன்பை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவின் பெயரால் வருபவர்களை வரவேற்பது, கிறிஸ்துவையும் விண்ணகத் தந்தையையும் வரவேற்பதற்கு ஒப்பானது என்றும் எடுத்துரைத்தார்.
இறுதியாக, தன் மகனை அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு, அவரை இழக்கவும் தயாராக இருந்த அன்னை மரியாளின் பரிந்துரையால், கிறிஸ்துவின் அன்பிற்கு தாழ்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த சாட்சிகளாக வாழும் அருளை அனைவரும் பெற வேண்டுமென்று இறைவேண்டல் செய்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
