கிறிஸ்துவில் இணைந்திருக்கும் திருஅவையே மிகுந்த பலன் தரும்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
நானே உண்மையான திராட்சைக்கொடி" என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவுடன் இணைந்திருக்கும் திருஅவையே மிகுந்த பலனைத் தரும் என்று வலியுறுத்தினார்.
ஜூன் 26, வெள்ளியன்று, புனித பேதுருவின் கல்லறையில் இடம்பெற்ற கர்தினால்களின் சிறப்புப் பேரவைக் (Consistory) கூட்டத்தைத் தொடங்கி வைத்து திருப்பலியை நிறைவேற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, நம்பிக்கையால் கிடைக்கும் உண்மையான சுதந்திரம் குறித்து சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்.
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் முன்மாதிரி, நம்பிக்கையால் கிடைக்கும் உண்மையான சுதந்திரத்தை வாழ நம்மை அழைக்கிறது என்றும், ஆண்டவர் இயேசுவுடனான உறவுதான் மனிதரை பாவத்திலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுவிக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, அவரைப் பின்பற்ற அழைக்கும் இயேசு, திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாக நம்மை உலகிற்கு அனுப்புகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.
எனவே, நற்செய்தியை அறிவித்தல், திருவருட்சாதனங்களைக் கொண்டாடுதல் மற்றும் இறைமக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல் ஆகியவை, நல்ல ஆயரான கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அளவுக்கேற்ப பலன் தருகின்றன என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.
மேலும், ஒற்றுமையிலும் நீதியிலும் அமையும் அமைதிக்காக அழைப்பு விடுத்த திருத்தந்தை, உலகில் நிலவும் போர்களும் மோதல்களும் மனிதகுலத்தை ஆழமாகப் புண்படுத்துகின்றன என்றும், போர் ஒருபோதும் மனிதகுலத்திற்கு ஏற்றதல்ல; அது இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவதுமில்லை என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்துவில் ஒன்றுபட்ட மனிதக் குடும்பமாக வாழும் நாம், மனிதகுலத்தின் ஒற்றுமையை பாதுகாப்பது ஒழுக்கநெறி சார்ந்த கடமை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நீதியின் வழியே அமைதியை உருவாக்குவதுதான் மனிதகுலத்தின் உண்மையான அழைப்பு என்று எடுத்துரைத்தார்.
அண்மையில் வெளியிட்டுள்ள மகத்தான மானுடம் என்னும் திருத்தூது மடலின் கருத்துகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மனித மாண்பு, சகோதரத்துவம், நீதி மற்றும் முழுமையான மனித முன்னேற்றத்தை வளர்க்கும் "அன்பின் நாகரிகத்தை" உருவாக்க திருஅவை தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கீழ்ப்படிதலின் வழியாக ஒத்திசைவையும் ஒற்றுமையையும் வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுத்த திருத்தந்தை, கேட்டறியும் மனப்பான்மையிலும் ஒத்திசைவான பயணத்திலும் திருஅவை வளர வேண்டும் என்றும், இறைவார்த்தைக்கும் தூய ஆவியாரின் வழிநடத்தலுக்கும் செவிசாய்க்கும் திருஅவையே இன்றைய உலகின் சவால்களுக்கு உரிய பதிலை வழங்க முடியும் என்று வலியுறுத்தினார்.
திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம் (Synodality) அனைவரையும் ஒன்றிணைக்கும் வழியாக அமைகிறது என்றும், தலைமை என்பது கட்டளையிடும் பணியல்ல; முதலில் கேட்டு அறிந்து பின்னர் வழிநடத்தும் பணியே உண்மையான தலைமையெனவும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
இறுதியாக, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பரிந்துரையை வேண்டி, ஒற்றுமை, அமைதி மற்றும் நற்செய்தி அறிவிப்பின் பணியில் திருஅவை தொடர்ந்து உறுதியுடன் முன்னேற இறைவன் அருள்புரிய வேண்டும் என்று இறைவேண்டல் செய்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
