தேடுதல்

இத்தாலிய நீச்சல் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது. இத்தாலிய நீச்சல் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது.  (@Vatican Media)

அர்ப்பணிப்பும் நேர்மையும் விளையாட்டின் உண்மையான வெற்றி!

இத்தாலிய நீச்சல் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் 62வது செட்டே கொல்லி சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சந்தித்த திருத்தந்தை , விளையாட்டு உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாக அமைகிறது என்று கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

விளையாட்டு மனிதரின் உடல், மனம் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒருங்கிணைத்து, அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் நேர்மை போன்ற உயரிய விழுமியங்களை வளர்க்கிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 25, வியாழனன்று, இத்தாலிய நீச்சல் கூட்டமைப்பின் நிர்வாகிகள், 62வது செட்டே கொல்லி அனைத்துலக  நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, விளையாட்டு உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

போட்டி, விளையாட்டுகளில் ஒரு வீரரின் மேன்மை, அவரது திறமையால் மட்டுமல்ல, அவரை வழிநடத்தும் உயரிய நோக்கங்கள் மற்றும் விழுமியங்களாலும் அளவிடப்படுகிறது என்று திருத்தந்தை கூறினார்.

நீச்சல் விளையாட்டு தனித்துவமான ஆன்மீக அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நீர் மனித வாழ்வின் ஆதாரத்தை நினைவூட்டுவதோடு, கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு அருளடையாளமாகவும், கிறிஸ்துவில் கிடைக்கும் புதிய வாழ்வின் அடையாளமாகவும் விளங்குகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் பல்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே ஆர்வத்தாலும் பொதுவான விழுமியங்களாலும் ஒன்றிணைவது நம்பிக்கையின் அடையாளம் என்றும், அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் மக்களிடையே அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வாய்ப்பாக அமைகின்றன என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் காலம் முடிவுக்கு வந்தாலும், அவற்றின் மூலம் கற்றுக்கொள்ளப்படும் உயரிய விழுமியங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து பிறருக்கும் எடுத்துச்செல்லுமாறு வீரர்களை ஊக்குவித்து புனித பியர் ஜியோர்ஜியோ பிரசாத்தியின் பரிந்துரையை வேண்டி, அனைவருக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூன் 2026, 13:30