தேடுதல்

நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் திருத்தந்தை பதினான்காம் லியோ நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் திருத்தந்தை பதினான்காம் லியோ  (@Vatican Media)

பேதுரு நிதிக்கு பங்களித்த உலகக் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை நன்றி!

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில், பேதுரு நிதிக்கு பங்களித்த உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நன்றி தெரிவித்தார். மேலும், நோயாளிகள், சிறைக்கைதிகள், திருஅவைப் பணியாளர்கள், சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக உழைப்போர் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 29, திங்களன்று, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆண்டுதோறும் வழங்கப்படும் பேதுரு நிதி உதவிக்கு (Peter’s Pence)  தாராளமாகப் பங்களித்த உலகளாவிய கத்தோலிக்கர்களுக்குப் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிதியுதவியானது புனித பேதுருவின் வாரிசாகத் தாம் ஆற்றும் ஆன்மீக மற்றும் உலகளாவிய பணிகளுக்குப் பெரிதும் துணையாக இருக்கிறது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

இத்தகைய உலகளாவிய நன்கொடைகள் மூலம் பேரிடர் நிவாரணப் பணிகள், ஏழை எளியோருக்கான தொண்டுகள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான உதவிகளை வத்திக்கானால் மேற்கொள்ள முடிகிறது என்று விவரித்த திருத்தந்தை, நம்பிக்கையிலும் ஒற்றுமையிலும் தொடர்ந்து இணைந்து பயணிக்க நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நோயாளிகள், தனிமையில் வாடுவோர் மற்றும் சிறைக்கைதிகளுக்காக சிறப்புப் இறைவேண்டல்களை மேற்கொண்ட திருத்தந்தை, மேலும், உரோம் நகரில் பணியாற்றும் பங்குத்தந்தையர்கள், துறவிகள், கன்னியர்கள் மற்றும் ஆன்மீகப் பணியாளர்களுக்குத் தனது நன்றியை தெரிவித்ததுடன், நகரின் கிறிஸ்தவப் பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்க அவர்களின் தினசரிப் பணி இன்றியமையாதது என்று பாராட்டினார்.

தொடர்ந்து, சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் குரலாக விளங்கும் வத்திக்கான் செய்தித்தாளின் மாதாந்திர இணைப்பான 'எல் ஒஸர்வாடோர் தி ஸ்ட்ராடா' (L’Osservatore di Strada) இதழை விநியோகித்துக் கொண்டிருந்த வீடற்ற எளிய மக்களை திருத்தந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்த இதழை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இறுதியாக, ‘வியா டெல்லா கான்சிலியாஜியோன்’ (Via della Conciliazione) வீதியில் பாரம்பரியமிக்க வண்ணமயமான மலர் அலங்காரங்களை (Infiorata) உருவாக்கிய தன்னார்வலர்களுக்கும்,  இந்த ஆண்டில் புனித பிரான்சிஸ் அசிசியார் மற்றும் அவரது 'படைப்புகளின் புகழ்ப்பாடல்' நினைவாக நடைபெற்ற ‘ஜிராண்டோலா டி காஸ்டல் சாண்ட் ஆண்ட்ஜெலோ’ (Girandola di Castel Sant’Angelo) வருடாந்திர வானவேடிக்கை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கும் திருத்தந்தை தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூன் 2026, 11:00