அமெரிக்கா தனது அடிப்படை விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்த திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அமெரிக்கா தனது 250-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், தேசிய அரசியலமைப்பு மையம் (National Constitution Center) வழங்கிய "லிபர்டி மெடல்" விருதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மனித மாண்பு, உயிர், சுதந்திரம், நீதி, அமைதி ஆகிய அடிப்படை விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்துமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
"அனைவரும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்றும், உயிர், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை நாடும் மறுக்க முடியாத உரிமைகள் அனைவருக்கும் உண்டு" என்ற அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் கொள்கைகள், இறைவனால் அளிக்கப்பட்ட மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டவை என்று வலியுறுத்திய திருத்தந்தை, மனித மாண்பு எந்த அரசுக்கும் முன்பே நிலைத்திருப்பதாகவும், அதைப் பாதுகாப்பதே அரசின் முதன்மைப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமெரிக்காவின் வரலாற்றைப் போற்றிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரை வரவேற்ற பாரம்பரியத்தையும், உலகளவில் சுதந்திரத்தைப் பாதுகாக்கச் செய்த தியாகங்களையும் பாராட்டிய அதேவேளை, "அனைவருக்கும் சுதந்திரமும் நீதியும்" என்ற இலக்கு இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்றும், ஒவ்வொரு தலைமுறையும் அந்த இலட்சியத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
உயிர் வாழும் உரிமையே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை என்று வலியுறுத்திய திருத்தந்தை, கருவுறுதல் முதல் இயற்கை மரணம் வரை ஒவ்வொரு மனித உயிரையும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியோரின் வாழ்வையும் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்தார்.
உண்மையான சுதந்திரம் என்பது, உண்மையை உணர்ந்து மனசாட்சியின் வழிகாட்டுதலின்படி பொறுப்புணர்வுடன் வாழ்வதே என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
சமயச் சுதந்திரம், மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் பொதுநலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, தற்காலிக நலன்களை விட நிலையான விழுமியங்களின் அடிப்படையில் அமெரிக்க மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலம் அமைதி, தாராள மனப்பான்மை மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
