தேடுதல்

அன்பு நிறைந்த இதயங்களே மனிதநேய உலகை உருவாக்கும்!

லம்பேதூசா ஆயர் பயணத்தில், நகர மேயரின் வரவேற்புக்கு பதிலளித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, புலம்பெயர்ந்தோருக்கு சேவையாற்றும் லம்பேதூசா மக்களின் மனிதநேயப் பணியைப் பாராட்டினார். வார்த்தைகளைவிட அன்பும் பகிர்வும் நிறைந்த செயல்களே மனிதநேயத்தின் உண்மையான சாட்சியம் என்றும், கிறிஸ்துவின் அன்பால் உலகை மேலும் மனிதநேயமிக்கதாக மாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 04, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் லம்பேதூசா தீவிற்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக, அத் தீவின் சலினா பகுதியில் அமைந்துள்ள "அரேனா" விளையாட்டு மைதானத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய உரை:

மாண்புமிகு நகர மேயர் அவர்களே, அரசு அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே!

லம்பேதூசா மற்றும் லினோசா நகராட்சி மக்களின் சார்பாக எனக்கு அன்பான வரவேற்பு வழங்கிய நகர மேயர் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஃபவலோரோ துறைமுகத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரைச் சூட்டியிருப்பது, எனது முன்னோடியான அவர், உங்கள் சமூகத்துடனும், புலம்பெயர்ந்த நமது சகோதர சகோதரிகளுடனும் ஏற்படுத்திக்கொண்ட ஆழமான உறவின் அடையாளமாகும். உங்களுக்கு மிகவும் சவாலான காலங்களில் அவர் உங்களுடன் நெருக்கமாக இருந்தார். இன்று, அந்தத் திருத்தந்தை தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறார், உங்களைத் தாங்குகிறார், உங்களை ஊக்குவிக்கிறார் என்பதை உங்களிடம் கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

நான் இங்கு உரையாற்ற வரவில்லை; மாறாக, நம் நடுவே கிறிஸ்துவின் உன்னதமான உடனிருப்பின் அடையாளமான திருப்பலியைக் கொண்டாடவே வந்துள்ளேன். தம்மையே நமக்காக அர்ப்பணித்து அப்பத்தைப் பிட்டு வழங்கிய இயேசுவின் செயல், நமது அன்றாட உதவி மற்றும் பகிர்வு செயல்களுக்கு அர்த்தத்தையும் ஆற்றலையும் அளிக்கிறது. ஆம், வார்த்தைகளைவிட செயல்களே பேசும் இடம் இது. ஆனால், அந்தச் செயல்கள் உண்மையான மனிதநேயத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமெனில், அவை அன்பு நிறைந்த இதயத்திலிருந்து பிறக்க வேண்டும். அதனால்தான் நாம் இன்று இங்கு ஒன்றுகூடியுள்ளோம். கிறிஸ்துவிடமிருந்து அவர் மட்டுமே வழங்கக்கூடிய அன்பைப் பெற்றுக்கொண்டு, இன்றைய உலகமும் நாளைய உலகமும் அனைவருக்கும் மேலும் மனிதநேயமிக்க உலகமாக மாற இறைவனின் அருளைப் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூலை 2026, 12:48