தேடுதல்

காஸ்தல் கந்தோல்போவில் உற்சாக வரவேற்பைப் பெற்றார் திருத்தந்தை!

கோடைகால ஓய்விற்காக காஸ்தல் கந்தோல்போ சென்றடைந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, அங்கு திரண்டிருந்த நம்பிக்கையாளர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கோடைகால ஓய்விற்காக காஸ்தல் கந்தோல்போ சென்றடைந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, அங்கு திரண்டிருந்த நம்பிக்கையாளர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். திருத்தந்தையரின் அரண்மனை மாளிகையின் பால்கனியில் ஏற்றப்பட்டிருந்த கொடி, அவரது வருகையை மக்களுக்கு அறிவித்தது.

லம்பெதூசாவிற்கான தனது மேய்ப்புப்பணி பயணத்தையும், ஜூலை 5 அன்று புனித பேதுரு சதுக்கத்தில் நண்பகல் மூவேளைச் செப உரையையும் நிறைவு செய்த பின்னர், அதே நாள் பிற்பகலில் இத்தாலியின் லாசியோ மாநிலத்தில் அமைந்துள்ள காஸ்தல் கந்தோல்போவிற்கு திருத்தந்தை பயணமானார். திருத்தந்தை இல்லத்தின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருத்தந்தை ஜூலை 27 வரை அங்கு ஓய்வில் தங்கியிருப்பார்.

அரண்மனை மாளிகையின் பால்கனியில் இருந்து மக்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, “காஸ்தல் கந்தோல்போ மக்களே, மாலை வணக்கம்! உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த சில வாரங்களை சிறிது ஓய்வு, இறைவேண்டல், வாசிப்பு மற்றும் விளையாட்டுடன் இங்கு செலவிடவிருக்கிறேன். நாம் ஒன்றுகூடுவது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி. நீங்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள்” என்று கூறினார்.

“வரவேற்கிறோம்” என்ற முழக்கங்களும் கரவொலியும் ஒலித்த நிலையில், மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிய திருத்தந்தை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மூவேளைச் செப உரையிலும், பிற நிகழ்வுகளிலும் மீண்டும் சந்திப்போம் என்றும், “குறிப்பாக இந்த ஓய்வுக் காலத்தில் உங்களுக்காக நான் தொடர்ந்து செபிக்கிறேன். இறைவன் எப்போதும் உங்களுடன் இருப்பாராக” என்றும் வாழ்த்தினார்.

2025 ஜூலை 13 அன்று திருப்பலி நிறைவேற்றிய வில்லனோவாவின் புனித தோமா பங்குத் தந்தையையும் பங்கு மக்களையும் நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை, தனது ஓய்வுக் காலத்தில் புதன் மறைக்கல்வி உரை, தனிப்பட்ட மற்றும் சிறப்புச் சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 5 முதல் புதன் மறைக்கல்வி உரைகள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூவேளைச் செப உரை காஸ்தல் கந்தோல்போவின் பியாச்சா தெல்லா லிபெர்தா (Piazza della Libertà) சதுக்கத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:13