தேடுதல்

திருத்தந்தையின் லம்பேதூசா பயணம் திருத்தந்தையின் லம்பேதூசா பயணம்  (@Vatican Media)

புலம்பெயர்ந்தோரின் மாண்பை வலியுறுத்திய திருத்தந்தையின் லம்பெடுசா பயணம்!

இத்தாலியின் மைய நிலப்பரப்பை விட வட ஆப்பிரிக்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள லம்பேடுசா தீவு, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,82,000-க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்கும் அடைக்கலம் அளித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இத்தாலியத் தீவான லம்பேடுசாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் வரவேற்பு மையத்திற்கு வரும் புதிய புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஜூலை 4, சனிக்கிழமை அன்று அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இத்தாலியின் மைய நிலப்பரப்பை விட வட ஆப்பிரிக்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள லம்பேடுசா தீவு, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,82,000-க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்கும் அடைக்கலம் அளித்துள்ளது. இதனால் லம்பெடுசா தீவு ஐரோப்பாவிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளது.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இந்தப் பயணம், 2013-ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லம்பேடுசாவிற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அப்போது அவர் புலம்பெயர்ந்தோர் மீதான "உலகமயமாக்கப்பட்ட அலட்சியத்தை" (globalisation of indifference) வன்மையாகக் கண்டித்தார். அண்மைய ஆண்டுகளில் இந்த மையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும்,  மத்திய தரைக்கடல் பகுதியைக் கடக்கும் பயணம் அதிக ஆபத்தானதாக மாறியுள்ளது. 2014 முதல் 26,000-க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் இந்தப் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய தரைக்கடல் பகுதிக்கான அனைத்துலக புலம்பெயர்வு அமைப்பின் (IOM) ஒருங்கிணைப்பு அலுவலக இயக்குநர் சால்வடோர் சோர்டினோ அவர்கள், "புலம்பெயர்ந்தோர் எப்போதும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இந்தப் பயணம் அமைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.

மேலும் "முறையாக நிர்வகிக்கப்படும் போது, புலம்பெயர்வு என்பது உலகளாவிய சமத்துவமின்மை, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள உதவும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வலுவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், விரிவாக்கப்பட்ட சட்டப்பூர்வ புலம்பெயர்வு வழிகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக சட்டத்திற்கான முழுமையான மரியாதை ஆகியவற்றின் அவசியத்தையும் சோர்டினோ எடுத்துக்காட் டியுள்ளார்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்பதிலும் அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைப்பதிலும் திருஅவை மற்றும் நம்பிக்கை சார்ந்த அமைப்புகளின் முக்கிய பங்கை அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன், அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாடல்களுக்குப் பதிலாக, சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு புலம்பெயர்ந்தோரின் நேர்மறையான பங்களிப்பை அங்கீகரிக்கும் உண்மை அடிப்படையிலான உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அவர் சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூலை 2026, 13:09