தேடுதல்

திருத்தந்தை வத்திக்கானில் கொலம்பியா குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். திருத்தந்தை வத்திக்கானில் கொலம்பியா குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.  (@Vatican Media)

கொலம்பியா அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!

கொலம்பியா குடியரசின் அதிபர் குஸ்தாவோ பெட்ரோ உர்ரெகோ அவர்கள், வத்திக்கானில் திருத்தந்தை பதினான்காம் லியோ மற்றும் திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 02, வியாழனன்று, கொலம்பியா அரசு தலைவர் குஸ்தாவோ பெட்ரோ உர்ரெகோ (Mr. Gustavo Petro Urrego) அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பைப் தொடர்ந்து, பெட்ரோ அவர்கள் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் வெளியுறவுத்துறை மற்றும் அனைத்துலக அமைப்புகளுடனான உறவுகள் பிரிவின் பன்முகத் துறைக்கான துணைச் செயலர் பேரருள்திரு. டேனியல் பாச்சோ (Msgr. Daniel Pacho) ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மிகவும் "இணக்கமான" சூழலில் நடைபெற்றன என்றும், திருப் பீடத்திற்கும் கொலம்பியாவுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவுகள் குறித்து இருதரப்பும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தின என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் "திருஅவைக்கும் அரசுக்கும் இடையே உள்ள நேர்மறையான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை" இந்த விவாதங்கள் பிரதிபலித்தன என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது கொலம்பியா மற்றும் அதன் அண்டை மாநிலத்தின் சமூக-அரசியல் நிலவரங்கள் குறித்தும், குறிப்பாக ஆயுத மோதல்களின் தாக்கங்கள், அனைத்துலக அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஜூலை 2026, 12:41