தேடுதல்

வெனிசுலாவில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய பாதிப்புகள் வெனிசுலாவில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய பாதிப்புகள் 

வெனிசுலா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்த திருத்தந்தை!

ஞாயிறு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் நிறைவில், வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, இறைவன் அவர்களை இந்த கடினமான காலத்தில் தாங்குவாராக என்று வேண்டினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் – வத்திக்கான்

வெனிசுலாவில் ஏற்பட்ட "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் அனைத்து வெனிசுலா மக்களையும் இறைவேண்டலில் நான் தொடர்ந்து நினைவுகூருகிறேன் என்றும், இந்த பெரும் கடினமான நேரத்தில் இறைவன் அவர்களைத் தாங்குவாராக, என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூலை 05 , ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அந்நாட்டு மக்களுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தி னார்.

வெனிசுலாவில் ஏற்பட்ட "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது இறைவேண்டல்களை திருத்தந்தை உறுதிசெய்தார்.

கராகஸிலிருந்து ஏறத்தாழ  40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லா குவைராவுக்கு அருகில் மையம்கொண்டிருந்த இந்த இரட்டை நிலநடுக்கங்கள், ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக்கியுள்ளன. மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியை நிறைவு செய்யும் சூழலில், பலர் இன்னும் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமின் தாக் சேய் திருத்தலத்தில் ஜூலை 2 அன்று நடைபெற்ற அருளாளர் பிரான்சிஸ் சேவியர் துராங் பூ தியப் அவர்களின் அருளாளர் அறிவிப்பு விழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அவரை 'சிறந்த மறைபரப்பாளர்' என கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே வர்ணித்ததை எடுத்துரைத்தார்.

அருளாளர் பிரான்சிஸ் சேவியர் துராங் பூ தியப் அவர்கள், மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த உண்மையான மேய்ப்பராகவும், கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1946ஆம் ஆண்டு உயிரை அர்ப்பணித்த இறை ஊழியராகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு அவரது வாழ்வுச் சான்று புதிய வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:24