ஆகஸ்ட் மாதத்திற்கான திருத்தந்தையின் அசிசி பயணம் மற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணை வெளியீடு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்ட் 6ஆம் நாள் இத்தாலியின் அசிசி நகருக்கு மேற்கொள்ளவுள்ள மேய்ப்புப்பணி பயணத்தின் நிகழ்ச்சி நிரலை திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது. அன்றைய தினம், 'Go! Franciscan Youth Meeting 2026' எனும் அனைத்துலக பிரான்சிஸ்கன் இளைஞர் சந்திப்பில் பங்கேற்கும் இளைஞர்களுடன் இணைந்து திருப்பலியை நிறைவேற்ற உள்ளார்.
ஆண்டவரின் உரு மாற்றப் பெருவிழாவான ஆகஸ்ட் 6, வியாழக்கிழமையன்று, திருத்தந்தை அசிசி நகருக்குச் சென்று நூற்றுக்கணக்கான இளைஞர்களைச் சந்திப்பதுடன், திருப்பலியை நிறைவேற்றி, உள்ளூர் அரசு அதிகாரிகளையும் திருஅவையின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறும் 'Go! Franciscan Youth Meeting' நிகழ்வில் பங்கேற்கும் இளைஞர்களுடன் அவர் உரையாடுவார்.
திருத்தந்தை காலை 8.00 மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்பட்டு, காலை மணி 8.30 க்கு அசிசி சென்றடைவார். அங்கு அசிசி பேராயர் பெலிசே அக்குரோக்கா மற்றும் இத்தாலிய அரசு அதிகாரிகள் அவரை வரவேற்பர்.
பின்னர், தூய தூதர்களின் புனித மரியா பேராலயத்திற்குச் சென்று பிரான்சிஸ்கன் துறவற சபைகளின் தலைவர்களைச் சந்திப்பார். தொடர்ந்து காலை மணி 8.45 க்கு பேராலய வளாகத்தில் இளைஞர்களைச் சந்திக்க உள்ளார் என்று அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.
காலை மணி 9.15 க்கு, புனித பிரான்சிஸின் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகளை ஒருங்கிணைத்த தேசியக் குழுவினரையும் உள்ளடக்கிய பிரான்சிஸ்கன் சபை பிரதிநிதிகளை மடாலயத்தின் உள்முற்றத்தில் சந்தித்து வாழ்த்துவார்.
காலை மணி 10.30க்கு, புனித மரியாள் தூதர்களின் பேராலயத்தில் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தைக்கு, அதன் நிறைவில் ஒரு இளைஞர் நன்றியுரை வழங்குவார். மதியம் மணி 12.15யளவில் அசிசியிலிருந்து உலங்கூர்தியில் புறப்படும் திருத்தந்தை, மதியம் மணி 12.45 க்கு வத்திக்கான் திரும்புவார்.
புனித பிரான்சிஸின் நினைவில் அனைத்துலக இளைஞர் சந்திப்பு
'Go! Franciscan Youth Meeting' என்பது 18 முதல் 33 வயதுக்குட்பட்ட, நம்பிக்கையாளர்களும் நம்பிக்கையற்றவர்களும் உட்பட ஐரோப்பா முழுவதிலுமிருந்து வரும் இளைஞர்களுக்கான அனைத்துலக சந்திப்பாகும். இதில் கருத்தரங்குகள், செப நிகழ்வுகள், இசைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
2026ஆம் ஆண்டு புனித பிரான்சிஸின் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுவதால், அசிசியில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவழிபாடுகள், ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் மாதத்திற்கான பிற திருவழிபாட்டு நிகழ்வுகள்
திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கான அலுவலகம், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள பிற திருவழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
அசிசி பயணத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 அன்று அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி, காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள புனித தோமா வில்லனோவா திருப்பீடப் பங்குக் கோவிலில் காலை 10.00 மணிக்கு திருப்பலியை நிறைவேற்றுவார்.
ஆகஸ்ட் 22 ஆம் நாள், மத்திய இத்தாலியின் ரிமினி நகருக்கு மேய்ப்புப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, 'Meeting for Friendship among Peoples' என்ற அனைத்துலக நிகழ்வின் 47ஆவது பதிப்பில் பங்கேற்பார். அன்று மாலை மணி 6.30 க்கு நகரின் துறைமுகப் பகுதியில் திருப்பலியை நிறைவேற்றுவார்.
ஆகஸ்ட் 29 அன்று காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள 'ஏரிக்கரையின் அன்னை மரியாள்' ஆலயத்தில் மாலை 6.00 மணிக்கு திருப்பலியை நிறைவேற்றி, அதனைத் தொடர்ந்து பவனியையும் வழிநடத்துவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
