தேடுதல்

அமெரிக்கத் திருஅவையின் புதுப்பிப்புக்கும் ஒற்றுமைக்கும் நற்கருணை ஊற்றாக இருக்க வேண்டும்!

2026 தேசிய நற்கருணை திருப்பயணத்தின் நிறைவையொட்டி வெளியிட்ட காணொளிச் செய்தியில், அமெரிக்கத் திருஅவையின் ஒற்றுமை, புதுப்பிப்பு மற்றும் நற்செய்திப் பணிக்கு நற்கருணை தொடர்ந்து வலிமை அளிக்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 தேசிய நற்கருணை திருப்பயணத்தின் நிறைவையொட்டி வெளியிட்ட காணொளிச் செய்தியில், அமெரிக்கத் திருஅவையின் புதுப்பிப்பு, ஒற்றுமை மற்றும் நற்செய்திப் பணிக்கு நற்கருணை தொடர்ந்து ஆற்றல் வழங்கும் ஊற்றாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

நற்கருணையின் அருள்வரத்தின்மூலம், கல்வி, நலவாழ்வு மற்றும் சமூக நலப்பணிகளில் திருஅவை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதோடு, நற்செய்தி அறிவிக்கும் தனது பணியையும் உறுதியாக முன்னெடுக்கும் வலிமையைப் பெறும் என்று திருத்தந்தை கூறினார்.

அமெரிக்க சுதந்திரத்தின் 250-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இவ்வாண்டு தேசிய நற்கருணை திருப்பயணத்தின் கருப்பொருளான “இறைவனின் ஆட்சியின்கீழ் ஒரே நாடு” (One Nation Under God) என்ற முழக்கத்தை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, நாட்டிற்காக ஒற்றுமை, புதுப்பிப்பு மற்றும் குணமடைதலுக்காக எழுப்பப்பட்ட செபங்கள் தனது உள்ளத்திற்கும் நெருக்கமானவை என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இத்திருப்பயணம், ஒரு நாட்டின் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழியாகும் என்றும், பூமிக்குரிய தாயகத்தை மட்டுமல்லாது விண்ணகத் தாயகத்தையும் நோக்கி வாழ அழைக்கிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் ஆழமான நற்கருணை மரபை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, 1583 செப்டம்பர் 8 அன்று புளோரிடாவின் புனித அகுஸ்தீன் நகரில் ஸ்பானிய குடியேற்றவாசிகளால் கொண்டாடப்பட்ட முதல் நன்றித் திருப்பலி, நாட்டின் இறைநம்பிக்கை மரபிற்கு முக்கிய சான்றாகும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கப் புனிதர்களான புனித கதேரி தெகக்விதா, புனித எலிசபெத் அன் சீட்டன், புனித காதரின் ட்ரெக்சல், புனித ஜான் நியூமன், புனித ஃபிரான்சிஸ் சேவியர் கப்ரினி மற்றும் விரைவில் முத்திப்பேறு பெறவுள்ள அருளாளர் ஃபல்டன் ஷீன் ஆகியோரின் வாழ்வை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்கள் நற்கருணை ஆண்டவரின் முன்னிலையில் அமைதியான செபத்தின் மூலம் தங்களது திருத்தூதுப் பணிக்கான வலிமையைப் பெற்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, நற்கருணையை திருஅவையின் உயிர்நாடியாகவும், மிகவும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் போற்றுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, அனைத்து நம்பிக்கையாளர்களும் தங்களது பங்கு சமூகங்களில் ஆழமான நற்கருணை வாழ்வை வளர்த்தெடுத்து, தங்கள் வாழ்க்கையை இறைவனின் அன்பான திருவுளத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:05