எதிர்நோக்கைப் புதுப்பித்த திருத்தந்தையின் லம்பெடுசா பயணம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
புலம்பெயர்வு நெருக்கடிகளின் அடையாளமாக விளங்கும் இத்தாலியின் சிறிய தீவான லம்பெடுசா, 2013-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தடத்தைப் பின்பற்றி வருகைதரும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை மனமகிழ்வுடன் வரவேற்றுள்ளது. உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர் ஒருவர், லம்பெடுசாவை வெறும் துயரத்தின் இடமாக அல்ல, மாறாக ஆபத்தான கடல் பயணத்திலிருந்து உயிர் தப்பிய புலம்பெயர்ந்தோர் புதிய வாழ்க்கையை நம்பிக்கையுடன் தொடங்கும் இடமாகக் கருத வேண்டும் என்று கூறி, அதை "நம்பிக்கையின் தீவு" என்று வர்ணித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான தனது கருணைக்காக இந்தத் தீவு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம் பிடித்திருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், லம்பெடுசாவை ஒற்றுமையின் உலகளாவிய அடையாளமாக மாற்றியது. அந்தப் பயணத்தின் போது, அவர் "உலகமயமாக்கப்பட்ட அலட்சியத்தை" (globalisation of indifference) கண்டித்தார். மேலும் கடலில் உயிரிழந்தவர்களின் நினைவாக மத்திய தரைக்கடலில் மலர்களைத் தூவிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகதிகளின் படகிலிருந்து செய்யப்பட்டு உலகப் புகழ்பெற்ற லம்பெடுசா சிலுவையை ஆசீர்வதித்தார்.
அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தற்போது லம்பெடுசாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அங்கு மதம் அல்லது தேசியம் ஆகியவற்றைக் கடந்து கடலில் பலியானவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள உள்ளூர் கல்லறையையும் பார்வையிடுகிறார். மேலும், புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழும் "ஐரோப்பாவின் நுழைவாயில்" (Gateway to Europe) என்ற நினைவுச் சின்னத்தில் அவர் இறைவேண்டல் செய்கிறார்.
தீவின் விளையாட்டு மைதானத்தில் திருப்பலியை நிறைவேற்றுவதற்கு முன், ஃபெவரோலோ படகுத்துறையில் (Favarolo Pier) அவர் ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தையும் சந்திக்கிறார்.
இந்தத் திருப்பலியின் போது, திருத்தந்தை அவர்களுக்கு புலம்பெயர்ந்தோரின் படகுகளிலிருந்து செதுக்கப்பட்ட ஒரு மரத்தாலான கலங்கரை விளக்கம் பரிசாக வழங்கப்படும். அதை அவர் நம்பிக்கை, ஒளி மற்றும் புதிய வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாக வத்திக்கானுக்கு எடுத்துச் செல்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
