தேடுதல்

மனித முன்னேற்றத்திற்கான திருப்பீட அலுவலகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அருள்சகோதரி அலெஸாண்ட்ரா ஸ்மெரிலி. மனித முன்னேற்றத்திற்கான திருப்பீட அலுவலகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அருள்சகோதரி அலெஸாண்ட்ரா ஸ்மெரிலி.  (ANSA)

ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறையின் புதிய தலைவராக அருள்சகோதரி ஸ்மெரிலி நியமனம்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்தின் கானின் 'ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறைக்கு' புதிய தலைவராக (Prefect) அருள்சகோதரி அலெஸாண்ட்ரா ஸ்மெரிலி அவர்களை நியமித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறைக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

அருள்சகோதரி அலெஸாண்ட்ரா ஸ்மெரிலி அவர்களை தலைவராகவும், கர்தினால் ஃபாபியோ பாஜியோ அவர்களை லௌதாதோ சி ( இறைவா உமக்கே புகழ் ) உயர்கல்வி மையத்திற்கான சிறப்புப் பொறுப்புடன் கூடிய இணைத் தலைவராகவும், பேரருள்திரு ஜோசப் பார்லாஸ் அவர்களை செயலாளராகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்

இந்த மூன்று நியமனங்களைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் ஒன்றாம் நாள் அன்று இந்த மூவரும் பொறுப்பேற்றுக் கொள்வர் என்று அச்செய்தித் தொடர்பகம் குறிப் பிட்டுள்ளது

தொன் போஸ்கோவின் சலேசிய அருள்சகோதரிகள் சபையின் உறுப்பினரான அருள்சகோதரி அலெஸாண்ட்ரா ஸ்மெரிலி, 2021 முதல் திருப்பீடத்‌ துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் திருப்பீடத்‌ துறையின் தலைவராகப் பணியாற்றி வந்த கர்தினால் மைக்கேல் செர்னி அவர்களைத் தொடர்ந்து சகோ. ஸ்மெரிலி இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத்‌ துறையின் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கர்தினால் ஃபாபியோ பாஜியோ அவர்களை  தற்போது இணைத் தலைவராக திருத்தந்தை நியமித்துள்ளார். தனது புதிய பொறுப்பில், கர்தினால் பாஜியோ லௌதாதோ சி உயர்கல்வி மையத்திற்கான சிறப்புப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார். இது படைப்பைப் பராமரிப்பதன் மூலம் ஈர்க்கப்பட்ட ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிப்பதில் திருப்பீடத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

அதே நேரத்தில், இதுவரை திருப்பீடத் துறையின் துணைச் செயலாளராக இருந்த பேரருள்திரு ஜோசப் பார்லாஸ் அவர்களை அதன் புதிய செயலாளராக திருத்தந்தை நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள், நீதி மற்றும் அமைதி, இடம்பெயர்வு, நலவாழ்வு, தொண்டு, படைப்பைப் பராமரித்தல் மற்றும் உலகம் முழுவதும் மனித மாண்பை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் திருஅவையின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வத்திக்கான் துறையான ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறைக்கான புதிய தலைமைத்துவக் குழுவை முழுமை அடையச் செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஜூலை 2026, 12:43