தேடுதல்

மெத்தடிஸ்ட் மற்றும் வால்டென்சியன் திருச்சபைகளின் பேரவை. மெத்தடிஸ்ட் மற்றும் வால்டென்சியன் திருச்சபைகளின் பேரவை. 

தொழில்நுட்ப வளர்ச்சியைவிட மனித மாண்பு முன்னிலையில் இருக்க வேண்டும்: திருத்தந்தை

மெதோடியர் மற்றும் வால்டென்சியன் திருஅவைகளின் மாமன்றக் கூட்டத்தையொட்டி அனுப்பிய செய்தியில், தொழில்நுட்ப வளர்ச்சி மனிதநேயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"மனித இதயம் பின்தங்கிவிடாமல் தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்" என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, பியத்மாண்டில் உள்ள டோரே பெல்லிஸில் தொடங்கிய மெதோடியர் மற்றும் வால்டென்சியன் திருஅவைகளின் மாமன்றக் கூட்டத்தையொட்டி ஆயர் டெரியோ ஒலிவேரோவு அவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

எண்ணிமப் புரட்சி "மனிதத்தைக் கடந்து செல்வதைக் குறிப்பதாகத் தோன்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்தச் சூழலில், "கடவுளின் உருவத்திலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதர்களின் சுதந்திரத்திற்கு இணைந்து சான்று பகருமாறு" கிறிஸ்தவர்களை ஊக்குவித்துள்ளார்.

தனது 'மகத்தான மானுடம்' என்ற திருத்தூது மடலை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "மனித இதயம் பின்தங்கிவிடாமல் தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியதன்" அவசியத்தை வலியுறுத்தியதுடன் மாமன்றக் கூட்டத்தின் மீது தூய ஆவியின் கொடைகளையும் இறை ஆசிரையும் வேண்டி தனது செய்தியை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.

மெதோடியர் மற்றும் வால்டென்சியன் திருஅவைகளின் கூட்டமைப்பின் மாமன்றக் கூட்டம், ஆகஸ்ட் 22 முதல் 26 வரை தூரினுக்கு அருகில் உள்ள டோரே பெல்லிஸில் இடம்பெறுகிறது. அமைதி, சமூக நீதி, கிறிஸ்தவ ஒன்றிப்பு, மனித உரிமைகள், விளிம்பு நிலை மக்களின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் இன்றைய உலகில் கிறிஸ்தவ சான்று வாழ்வுக்கு முன் இருக்கும் சவால்கள் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தும் இந்த மாமன்றம், அதன் செயல்திட்டம் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்களை விவாதித்து தீர்மானிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஆகஸ்ட் 2026, 14:45