பேதுருவைப் போல் குழப்பமான நேரங்களிலும் ஆண்டவருடன் உரையாடுவோம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
“நமது நம்பிக்கை வாழ்விலும், இறைவேண்டலிலும் பேதுருவின் அதே நேர்மையைக் கொண்டிருப்போம் என்றும், நமது இதயங்கள் குழப்பத்தில் இருக்கும்போதுகூட, நாம் உண்மையில் என்ன உணர்கிறோம் என்பதைத் தாழ்ச்சியுடன் இயேசுவிடம் எடுத்துரைப்போம்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 30, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு திருத்தந்தை குறிப்பிட்டார்.
அன்றைய நற்செய்திப் பகுதியை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, இயேசு தமது பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் குறித்து கூறியபோது பேதுரு அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், “ஆண்டவரே, இது உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது” என்றதைத் எடுத்துக்காட்டியதுடன் “இறைவனின் வழிகள் நமது எதிர்பார்ப்புகளிலிருந்து மாறுபடும்போது, அவற்றை ஏற்றுக்கொள்வது எளிதல்ல” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குழப்பமான நேரங்களில் பேதுரு நமக்கு இரண்டு முக்கியப் பாடங்களைக் கற்றுத்தருகிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அத்தகைய தருணங்களில்கூட ஆண்டவருடனான நமது உரையாடலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்றும், நாம் புரிந்துகொள்ள முடியாதவற்றை நம்பிக்கையுடன் ஆண்டவரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இறைவனின் செயல்களை ஒருபோதும் தீர்ப்பிடாமல், அவை நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தாலும், இறைவன் தனது செயல்களின் வழியாக நமக்கு வெளிப்படுத்துவதைத் தாழ்ச்சியுடனும் இறைவேண்டலுடனும் கேட்க வேண்டும்” என்று திருத்தந்தை கூறினார்.
இறுதியாக, இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட பேதுரு, பின்னர் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்திருந்து, மறைச்சாட்சியாகவும் உயிர் துறந்தார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நமது நம்பிக்கை வாழ்விலும் இறைவேண்டலிலும் பேதுருவைப் போன்று நேர்மையுடனும், இயேசுவின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதில் கீழ்ப்படிதலுடனும் வாழ அருள்புரியுமாறு இறைவேண்டல் செய்யுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து தனது திருத்தூது ஆசீரை வழங்கி மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
