உண்மை, நீதி, அமைதியின் நற்செய்தியில் உறுதியாக நில்லுங்கள்: திருத்தந்தை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"ஆண்டவருக்குள் உறுதியாயிருங்கள்" என்றும் உண்மை, நீதி மற்றும் அமைதியின் நற்செய்தியில் உறுதியாக நிற்குமாறும் இராணுவப் பணியாளர்களை திருத்தந்தை வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 24, திங்களன்று, போர்ச்சுகல் இராணுவ மறைமாவட்ட உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, இராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய குடியரசுக்காவல் படை மற்றும் காவல் துறை ஆகியவற்றில் பணிபுரியும் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவர் அல்லாத உறுப்பினர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மற்றவர்களுக்கு உதவ முற்பட்டபோது உயிரிழந்த இரண்டு இளம் இராணுவ வீரர்களை சிறப்பாக நினைவு கூர்ந்த திருத்தந்தை, அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இறைப்பராமரிப்பிற்கு ஒப்படைத்தார்.
இராணுவத்தில் பணிபுரியும் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நிறுவப்பட்டு, பின்னர் முழுமையான இராணுவ மறைமாவட்டமாக (Military Ordinariate) முறைப்படுத்தப்பட்ட இவ்வமைப்பின் முக்கிய வரலாற்று மைல்கற்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, குடிமை மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்பட்டு, இராணுவ மற்றும் காவல் துறையினரின் ஆன்மீக நலனுக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வழிகாட்டுமாறு அவ்வமைப்பை ஊக்கப்படுத்தினார்.
தாய்நாட்டைப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, குடிமக்களைப் பாதுகாப்பது மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடுவது ஆகிய முக்கியப் பொறுப்புகள் இராணுவத்தினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
நற்செய்தியில் இடம்பெறும் உரோமைய நூற்றுவர் தலைவரை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, கீழ்ப்படிதல், ஒழுக்கம், பற்றுறுதி, பொறுப்புணர்வு, துணிவு மற்றும் சேவை போன்ற நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் அந்த நூற்றுவர் தலைவர் தாழ்ச்சியையும் இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, அவர்களின் பணிகளை பாத்திமா அன்னையிடம் ஒப்படைத்த திருத்தந்தை, இறைவன் அருளும் மகிழ்ச்சி அவர்களின் ஆற்றலாக நிலைத்திருக்க இறைவேண்டல் செய்து தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
