தேடுதல்

நார்வே லூத்தரன் ஆயர்களுடன் இணைந்து செபித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள். நார்வே லூத்தரன் ஆயர்களுடன் இணைந்து செபித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்.  (@VATICAN MEDIA)

பிரிவுகளுக்கு மத்தியில் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: திருத்தந்தை

இன்றைய உலகில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் பிரிவுகளுக்கு மத்தியில், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து, அமைதி மற்றும் நீதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இன்றைய உலகில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் பிரிவுகளுக்கு மத்தியில், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையைத் தேடவும், அமைதி மற்றும் நீதியை மேம்படுத்த ஒன்றாகச் செயல்படவும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 26, புதனன்று, உரோமைக்கு திருப்பயணம் மேற்கொண்டிருந்த நார்வேயைச் சேர்ந்த லூத்தரன் ஆயர்களை தீருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் வாழ்க்கை, கடவுளுக்கும் பிறரின் நலனுக்கும் தங்களை அர்ப்பணிக்குமாறு நம்பிக்கையாளர்களைத் தொடர்ந்து தூண்டுகிறது” என்றும் எடுத்துக்காட்டினார்.

தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் மற்றும் மறைசாட்சிகளுடன் தொடர்புடைய புனித இடங்களைப் பார்வையிடுமாறு அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, உலகளாவிய மோதல்கள் மூலம் மட்டுமல்லாமல், சமூகங்களுக்குள்ளும், குறிப்பாக அரசியல் மற்றும் சமூக உரையாடல்களிலும் பகைமை அதிகரித்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “கிறிஸ்தவர்களும்கூட தங்களுடன் உடன்படாதவர்களிடம் பகைமையுடன் நடந்துகொள்ளத் தூண்டப்படலாம்” என்று கூறிய திருத்தந்தை, அதற்கு மாறாக, நன்மையும் அன்பான தொண்டும் பகைமையை வெல்லும் வல்லமை கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன் அனைவரும் நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவ உணர்வுடனும் வாழ அழைப்பு விடுத்தார்.

பலமான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தின் அடையாளமாக லூத்தரன் ஆயர்களின் உரோமானியப் புனிதப் பயணத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நட்பு மற்றும் ஒற்றுமையின் சிறிய சைகைகள் கூட கிறிஸ்தவர்களை நல்லிணக்கப் பாதையில் வழிநடத்த உதவும் என்றும் கூறினார்.

இயேசு தம் சீடர்கள் அனைவரும் ஒன்றிப்புடன் இருக்க வேண்டும் என்று இறைவேண்டல் செய்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, பொதுவான திருமுழுக்கின் அடிப்படையிலும், பகிர்ந்து கொள்ளப்பட்ட பணியின் வழியாகவும், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து அமைதி மற்றும் நீதிக்காக பாடுபட வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

கிறிஸ்தவர்கள் இன்னும் ஆழமான சகோதரத்துவத்துடன் வாழ்ந்து, இயேசு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்களாகத் திகழ அருள்புரியுமாறு இறைவேண்டல் செய்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஆகஸ்ட் 2026, 12:40