தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

இறைமக்கள் திருப்பலியில் வெறும் மௌனப் பார்வையாளர்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ இருக்கக் கூடாது; மாறாக, இறைவார்த்தையைக் கேட்டு, கிறிஸ்துவோடு தங்களையே பலியாக ஒப்புக்கொடுத்து, உணர்வுபூர்வமாகவும் பக்தியுடனும் வழிபாட்டில் பங்கேற்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

ஆகஸ்ட் 26 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் ஆவணமான, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற தலைப்பில், திருவழிபாட்டில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளத் திருச்சங்கத் தந்தையர்கள் விரும்பியதற்கான காரணங்களை குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

முதலில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல” என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம். (எபிரேயர் 10:8-10)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

இத்தகைய பின்னணியில், அப்போது மிலான் பேராயராக இருந்த கர்தினால் ஜியோவானி பத்திஸ்தா மொன்தினி அவர்கள்,  1962 அக்டோபர் 28 அன்று தமது திருச்சபை மக்களுக்கு அனுப்பிய மூன்றாவது திருத்தூது மடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதில் அவர், “திருவழிபாடு என்பது இறைநிலையையும் மனிதநிலையையும் நேர்மையாக வெளிப்படுத்துவது. அது ஒரு மொழி. ஒருபுறம் இறைவனின் போதனையை எடுத்துச் செல்லும் ஊடகம்; மறுபுறம் இறைவனோடு உரையாடும் குரல். எனவே, அது தனது போதிக்கும் பணியைத் துறக்க முடியாது; மேலும், நம்பிக்கையும் பக்தியும் தன்னிச்சையான புரிதலுடன் வெளிப்படுவதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்” என்று எழுதினார்.

இந்த நம்பிக்கைகளால் உந்தப்பட்ட திருத்தந்தை புனித ஆறாம் பவுல், இறைமக்கள் “இனி மௌனமாகவும் செயலற்றவர்களாகவும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அவர்களின் உடல்ரீதியான இருப்பு, ஆன்மீக ரீதியான இல்லாமையுடன் ஒத்துப்போக முடியாது” என்று வலியுறுத்தினார்.

இந்தக் கருத்துகள், திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்க ஆவணத்தின் 48ஆம் எண்ணிக்கையில் கூறப்பட்டுள்ள போதனைகளுடன் தெளிவாக ஒத்துப்போகின்றன. அதில், இறைமக்கள் திருப்பலியின் மறைபொருளில் அந்நியர்களைப் போலவோ, வெறும் மௌன பார்வையாளர்களைப் போலவோ கலந்துகொள்ளாமல், சடங்குகள் மற்றும் இறைவேண்டுதல்களின் வழியாக அதன் பொருளை நன்கு புரிந்துகொண்டு, புனிதச் செயல்பாட்டில் உணர்வுடனும் பக்தியுடனும் முழுமையாகவும் செயல்பாட்டுடனும் பங்கேற்க வேண்டும் என்று திருச்சபை வலியுறுத்துகிறது.

அவர்கள் இறைவார்த்தையால் உருவாக்கப்பட வேண்டும்; ஆண்டவரின் திருவுடல் விருந்தில் ஊட்டம் பெற வேண்டும்; இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். மாசற்ற பலியை, குருவின் கரங்களால் மட்டுமல்லாமல், அவரோடு இணைந்து தங்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கிறிஸ்துவின் வழியாக, நாளுக்கு நாள் இறைவனோடும் ஒருவரோடொருவரும் ஒன்றிப்பதில் அவர்கள் நிறைவுபெற வேண்டும்.

இந்த வார்த்தைகளில் திருவழிபாட்டின் மதிப்பைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வை நாம் காண்கிறோம். திருச்சபையின் சடங்கு செயல்பாடுகள் வழியாக, மீட்புப் பணியின் நினைவுகூரல் நிகழும்போது, இறைவனோடு உண்மையான உறவை வாழ்வதற்கும், மீட்பின் நிகழ்வோடு நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் நமக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருவழிபாட்டின் புனிதச் செயல்களில் இடம்பெறும் சைகைகளும் வார்த்தைகளும் இந்த அனுபவத்தை உருவாக்குவதில் முக்கியமானவை என்பதால், இறைமக்களின் பங்கேற்பு ஒருபோதும் செயலற்றதாக இருக்க முடியாது.

திருச்சங்கச் சீர்திருத்தம், திருவழிபாட்டைத் திருச்சபையின் வாழ்வின் இதயமாக மையப்படுத்தியது. அதன் வழியாக, திருவழிபாடு “இறைவனின் வாழ்வு நமக்குப் பகிர்ந்தளிக்கப்படும் தெய்வீகப் பரிமாற்றத்தின் முதன்மையான ஊற்றாக” விளங்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

இந்த நம்பிக்கையிலிருந்தே, திருவிவிலியப் பகுதிகளிலும் இறைவேண்டுதல்களிலும் அடங்கியுள்ள செல்வத்தை அனைத்து இறைமக்களுக்கும் மேலும் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தேவையும், அக்காலத்தில் நடைமுறையில் இருந்த திருவழிபாட்டு நூல்களுடன் ஒப்பிடுகையில், கொண்டாட்டத்தின் ஒழுங்குமுறையை மேலும் தெளிவாகவும் எளிமையாகவும் அமைக்க வேண்டும் என்ற விருப்பமும் உருவானது.

உண்மையில், திருவழிபாடு ஓர் உயிருள்ள யதார்த்தமாக இருப்பதால், பல நூற்றாண்டுகளாக அது பல்வேறு வளர்ச்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு வந்துள்ளது. வெவ்வேறு காலங்களின் தேவைகளுக்கேற்ப திருச்சபையின் அதிகாரப்பூர்வ போதனை அமைப்பு அதன் வடிவங்களை மாற்றியமைத்துள்ளது. எனவே, மரபின் செல்வத்திற்கு மிகுந்த மரியாதை செலுத்தியதோடு, அதனை அனைவரும் எளிதாகப் பயன்படுத்தவும் அனுபவிக்கவும் செய்யும் நோக்கில், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் திருவழிபாட்டு நூல்களை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று கருதியதில் ஆச்சரியமில்லை.

திருச்சங்கத் தந்தையர்களின் நோக்கம் திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்க ஆவணத்தின் 21ஆம் எண்ணிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

“திருவழிபாட்டில் அடங்கியுள்ள நிறைவான அருள்களை கிறிஸ்தவ மக்கள் மேலும் உறுதியாகப் பெறுவதற்காக, தூய அன்னை திருச்சபை, திருவழிபாட்டை பொதுவாகவும் கவனமாகவும் சீர்திருத்த விரும்புகிறது. ஏனெனில், திருவழிபாட்டில் இறைவனால் நிறுவப்பட்டு, மாற்றமின்றி நிலைத்திருக்க வேண்டிய பகுதிகள் உள்ளன. அதேவேளையில், காலப்போக்கில் மாற்றத்திற்கு உட்படக்கூடிய பகுதிகளும் உள்ளன. அவற்றில் திருவழிபாட்டின் உள்ளார்ந்த இயல்புக்கு ஒவ்வாத கூறுகள் புகுந்திருந்தாலோ அல்லது அவை காலத்திற்கேற்ப பொருத்தமற்றவையாக மாறியிருந்தாலோ, அவை மாற்றப்படலாம்; சில நேரங்களில், அவற்றை மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.”

இத்தகைய சீர்திருத்தத்தில், புனித உண்மைகளை அடையாளப்படுத்தும் திருவழிபாட்டு வாசகங்களும் சடங்குகளும் அவற்றின் பொருளை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இதனால் கிறிஸ்தவ மக்கள் அவற்றின் பொருளை எளிதாகப் புரிந்துகொண்டு, முழுமையான, செயல்பாட்டுடனான, சமூகப் பங்கேற்புடன் கூடிய கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியும்.”

திருவழிபாட்டில் இறைவனால் நிறுவப்பட்டு மாறாத கூறுகளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்டு மாற்றத்திற்குட்படக்கூடிய கூறுகளுக்கும் இடையிலான இந்த வேறுபாடு, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களின் Mediator Dei திருத்தூது மடலில் ஏற்கனவே விளக்கப்பட்டிருந்தது. காலத்தின், சூழ்நிலைகளின், மக்களின் ஆன்மீகத் தேவைகளின் அடிப்படையில், தூய ஆவியால் வழிநடத்தப்படும் திருச்சபையின் அதிகாரப்பூர்வ அமைப்பால் மனிதக் கூறுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

உண்மையில், “பொதுவான சீர்திருத்தம்” என்ற விருப்பம் திடீரென உருவான ஒன்றல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வந்த திருத்தந்தையர்களின் செயல்பாடுகளிலும், திருவழிபாட்டு இயக்கத்தின் முயற்சிகளிலும் அது வெளிப்பட்டு வந்தது.

இறைமக்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் “அந்நியர்களைப் போலவோ அல்லது மௌன பார்வையாளர்களைப் போலவோ” இருக்கக்கூடாது என்ற கருத்து, ஏற்கனவே திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்களின் Divini Cultus திருத்தூது அமைப்பு விதித்தொகுப்பில்  வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள், புனித வாரத்தின் திருவழிபாட்டுச் சடங்குகளின் ஒழுங்குமுறையில் மாற்றங்களை மேற்கொண்டதை நாம் நினைவுகூரலாம். பல நூற்றாண்டுகளாக காலை நேரங்களில் முன்னதாகக் கொண்டாடப்பட்டிருந்த அந்தச் சடங்குகள், இயேசுவின் பாஸ்கா நிகழ்வுகளுடன் தொடர்புடைய உரிய நேரங்களில் நடைபெறும் வகையில் அவர் மறுசீரமைத்தார்.

அதேபோல், திருத்தந்தை புனித இருபத்துமூன்றாம் யோவான் அவர்கள்,  திருப்புகழ்மாலை மற்றும் திருப்பலி நூல்களில் இருந்த வழிபாட்டு விதிமுறைகளை எளிமைப்படுத்துவது அவசியம் என்று கருதினார். 1960 ஜூலை 25 அன்று வெளியிட்ட Rubricarum instructum என்னும் Motu proprio வழியாக அதனை அவர் அங்கீகரித்தார். மேலும், வரவிருந்த உலகளாவிய திருச்சங்கத்திடம் திருவழிபாட்டுச் சீர்திருத்தத்திற்கான அடிப்படைக் கொள்கைகளை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டுச் சீர்திருத்தம், திருச்சபையின் உயிரோட்டமிக்க மரபின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்வது, திருச்சங்கத்திற்குப் பிந்தைய காலத்தில் திருச்சபையின் சில பகுதிகளில் ஏற்பட்ட திருவழிபாட்டு முறைகேடுகளையும் நிராகரிக்க உதவுகிறது. சீர்திருத்தத்தின் அடிப்படையில் இருந்த சில கொள்கைகளை முழுமையானவையாகக் கருதியதாலோ அல்லது தவறாகப் புரிந்துகொண்டதாலோ ஏற்பட்ட இத்தகைய முறைகேடுகள், துரதிருஷ்டவசமாக இன்றும் சில நேரங்களில் இடம்பெறுகின்றன.

இது தொடர்பாக, திருச்சங்க ஆவணம் கூறும் முக்கியமான ஒரு கருத்தை நினைவுகூர்வது பயனுள்ளதாக இருக்கும்: “திருவழிபாட்டுச் செயல்கள் தனிப்பட்ட செயல்கள் அல்ல; அவை ‘ஒற்றுமையின் அருளடையாளமாக’ விளங்கும் திருச்சபையின் கொண்டாட்டங்கள். அதாவது, ஆயர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றுகூடி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புனித இறைமக்களின் கொண்டாட்டங்கள். ஆகவே, இச்செயல்கள் திருச்சபையின் முழு உடலுக்கும் உரியவை; அதனை வெளிப்படுத்துகின்றன; அதில் அனைவரையும் ஈடுபடுத்துகின்றன” (Sacrosanctum Concilium, 26).

எனவே, திருவழிபாட்டு விதிமுறைகளுக்கு மதிப்பளித்து, “உன்னதமான எளிமையுடன்” விளங்கும் திருவழிபாட்டைப் பாதுகாத்து வளர்ப்பது, முதன்மையாக திருச்சபையின் மேய்ப்பர்களான ஆயர்களின் பொறுப்பாகும்; அதேபோல் ஒவ்வொரு குருவின் பொறுப்பும் ஆகும். இவ்வாறு, ஒரே, புனித, கத்தோலிக்க மற்றும் திருத்தூதர் திருச்சபையின் உண்மையான இயல்பை திருவழிபாடு வெளிப்படுத்த வேண்டும்.

அத்தகைய திருவழிபாடு நற்செய்தி அறிவிப்பின் முக்கியமான ஊடகமாகவும், அருளின் கருவியாகவும் விளங்கும். அதன் வழியாக, திருச்சங்கம் கற்பிப்பதுபோல், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்வோம். மேலும், கிறிஸ்துவின் வழியாக, இறைவனோடும் ஒருவரோடொருவரும் கொண்டுள்ள ஒன்றிப்பில் நாம் நாளுக்கு நாள் நிறைவுபெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஆகஸ்ட் 2026, 13:38