தேடுதல்

வின்சென்ட் தே பவுல் சபையின் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை வின்சென்ட் தே பவுல் சபையின் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (ANSA)

இறைவேண்டலும் சமூக நீதிக்கான செயல்பாடும் பிரிக்க முடியாதவை: திருத்தந்தை

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை, இறைவேண்டலும் சமூக நீதிக்கான செயல்பாடும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இறைவேண்டலும் சமூக நீதிக்கான செயல்பாடும் இரண்டறக் கலந்தவை என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 28, வெள்ளியன்று, புனித வின்சென்ட் தே பவுல் சபையின் அமெரிக்கப் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அமெரிக்கா முழுவதும் தேவையில் உள்ள மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் அச்சபையின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“கடவுள் தங்களுக்கு அளித்துள்ள வரங்களையும் திறமைகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வலுவான சாட்சியம் அளிப்பதோடு, இறையரசைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கிறார்கள்” என்று திருத்தந்தை கூறினார்.

மிகவும் தேவையில் இருப்போருக்கு அவர்கள் ஆற்றும் சேவையை இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், அவருடனான தங்களது உறவை மேலும் ஆழப்படுத்துமாறு திருத்தந்தை அவர்களை ஊக்குவித்தார்.

மேலும் இறைவேண்டலும் சமூக நீதியும் "வெறும் ஒன்றுக்கொன்று துணையாக நிற்பவை மட்டுமல்ல, அவை உண்மையில் பிரிக்க முடியாதவை" என்று குறிப்பிட்ட  திருத்தந்தை, இறைவேண்டலை நடைமுறைச் சேவையுடன் இணைத்த புனிதரின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புனித அகுஸ்தினாரை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, ஏழைகளைக் கவனித்துக்கொள்வது இறுதியில் கிறிஸ்துவையே மையமாகக் கொண்டது என்றும்,  அன்பினால் தூண்டப்பட்டு பிறரைக் கவனித்துக்கொள்ளும்போது, அது தேவையில் இருப்போருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உதவி செய்பவரின் இதயத்தையும் கடவுளின் அருளால் நிறைக்கிறது என்றும் வலியுறுத்தினார்.

1833 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இச்சபை, ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய கத்தோலிக்க அமைப்பாகும். மேலும் இது புனித வின்சென்ட் தே பவுலின் சான்று வாழ்வால் ஈர்க்கப்பட்ட வின்சென்ஷியன் குடும்ப அமைப்புகளின் ஒரு பகுதியாகும்.

இறுதியாக ஏழைகளில் கிறிஸ்துவுக்குச் சேவை செய்வது, தங்கள் அண்டை வீட்டாரில் கிறிஸ்துவை அடையாளம் காண உதவுகிறது என்றும், கடவுளின் அருள் அவர்களின் இதயங்களையும் மனங்களையும் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, அச்சபையின் உறுப்பினர்கள் தங்கள் நேரத்தைத் தாராளமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டு தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஆகஸ்ட் 2026, 10:56