மன்னர் ஹாரால்டின் மறைவுக்கு திருத்தந்தை ஆழ்ந்த இரங்கல்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தீவிரமான இரத்தக் குறைபாடு காரணமாக ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் தனது 87-வது வயதில் காலமான மன்னர் ஐந்தாம் ஹாரால்டின் மறைவையடுத்து, மன்னர் எட்டாம் ஹாக்கோன், அரச குடும்பத்தினர் மற்றும் நார்வே மக்களுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
மன்னர் ஐந்தாம் ஹாரால்ட் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நார்வேயை ஆட்சி செய்து, மன்னர் ஏழாம் ஹாக்கோனுக்குப் பிறகு அந்நாட்டில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாக்கோன், மன்னர் எட்டாம் ஹாக்கோனாகப் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னர் ஹாரால்டின் மறைவால் தாம் மிகவும் வருந்துவதாகத் தனது இரங்கல் தந்தியில் தெரிவித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, புதிய மன்னர் மற்றும் நார்வே மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தனது நாட்டிற்கு ஹாரால்ட் ஆற்றிய பல ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மறைந்த மன்னரின் ஆன்மா அமைதி பெற அரச குடும்பத்தினருக்காக இறைவேண்டல் செய்வதாகவும் உறுதியளித்தார்.
ட்ராண்ட்ஹைம் மறைமாவட்ட ஆயரும், டிரோம்சோவின் திருத்தூது நிர்வாகியுமான எரிக் வார்டன் அவர்கள், மன்னர் ஹாரால்டிற்கு அஞ்சலி செலுத்தியதோடு, நார்வே மக்கள் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையின் மூலம் அவர் "நாட்டின் அடையாளமாகவே திகழ்ந்தார்" என்றும் குறிப்பிட்டார்.
நார்வேயில் உள்ள கத்தோலிக்கர்கள் மறைந்த மன்னருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மன்னர் எட்டாம் ஹாக்கோனுக்காகவும் இறைவேண்டல் செய்து வருவதாக ஆயர் வார்டன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
